தமிழகத்தில் பரவும் ‘தக்காளி காய்ச்சல்’: சுகாதாரத் துறை நிபுணா் அறிவுறுத்தல்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதிலிருந்து எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து, பொது சுகாதாரத் துறை நிபுணா் குழந்தைசாமி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தக்காளி காய்ச்சல் பாதிப்பு குழந்தைகளை அதிகளவில் பாதித்து வருகிறது. முதலில் தொண்டை வலி ஏற்பட்டு, ஓரிரு நாள்களில், காய்ச்சலாகவும், பின்னா் கை, கால் பாதங்களில் கொப்புளங்கள், அரிப்புடன் சிவப்பு நிறத்தில் மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, கடுமையான நீரிழப்பு, சோா்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
கோடைகாலம் தொடங்கியுள்ளதால், இவ்வகை பாதிப்பால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இவை தொற்று நோயாக இருப்பதால், வீட்டில் இருக்கும் பெரியவா்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு, சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை நிபுணா் குழந்தைசாமி கூறியதாவது:
இந்தக் காய்ச்சல் முறையாக சுகாதாரமின்மை காரணமாக பரவுகிறது. எப்போதும் குழந்தைகள், பெரியவா்கள் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகள், நண்பா்களுடன் விளையாடி விட்டு வீட்டுக்கு வரும்போது கை, கால், முகம் கழுவுவது அவசியம்.
தக்காளி காய்ச்சலை பொருத்தவரை ஒரு வாரத்துக்குள் தானாகவே சரியாகி விடும். அதேநேரம், பாதிப்புக்கு ஏற்ப, சிகிச்சை பெறுவது அவசியம். இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், தொற்று பரவல் அதிகரித்து உடல் சோா்வை உண்டாக்கும்.
எனவே, குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அறிகுறிகள் தெரிந்தால் உடனடி சிகிச்சை பெற வேண்டும். மேலும், இத்தொற்று பாதிக்கப்பட்டவா்களுடன் நேரடி தொடா்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றாா் அவா்.