TASMAC: "டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி ஊழல்" - குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமலாக்கத...
தமிழகத்தில் 14.55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: பொருளாதார ஆய்வறிக்கை
தமிழகத்தில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதன் மூலம் 14.55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழக அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
2024ஆம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டு ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 14.55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்வளர்ச்சியைத் தக்கவைப்பதற்கு, தமிழ்நாடு தனது பணியாளர்களுக்குத் தொழில்துறை 4.0 தொழில்நுட்பங்கள் சார்ந்து மறுதிறன் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
இதையும் படிக்க: தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும்: பொருளாதார ஆய்வறிக்கை
2023-24இல், சேவைத் துறை (மூன்றாம் நிலை) யானது மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்புக்கூட்டலில் (ஜிஎஸ்விஏ) 53.63% பங்களித்தது; அதற்கடுத்து இரண்டாம் நிலைத் துறை (33.37%), முதன்மைத் துறை (13%) பங்களித்துள்ளன. வளர்ந்த பொருளாதாரங்களைப் போலவே, மாநிலத்தின் இரண்டாம் நிலைத் துறையின் பங்கு 5% அளவில் அதிகரித்தால், வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.
அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட, நகரமயமாக்கப்பட்ட பொருளாதாரமான தமிழ்நாடு, 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. தற்போதைய ஆற்றலுடன், காலநிலை மாற்றம், மக்கள்தொகை மாற்றங்கள், தொழில்நுட்பச் சீர்குலைவு, மாறிவரும் வேலைவாய்ப்புச் சூழல்கள் போன்ற சவால்களை வியூகம் சார்ந்த திட்டமிடல் வாயிலாக வெற்றிகரமாக எதிர்கொண்டு தமிழ்நாடு இந்த இலக்கை எட்டும்.
மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியைப் பரவலாக்குவதற்குக் கிராமப்புறத் தொழில்முனைவோரை வளர்த்தெடுப்பதில் தமிழ்நாடு கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல், வேலையில் பெண்கள் பங்கேற்பதை ஊக்குவித்தல், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் உள்பட உயர்மதிப்பு உற்பத்தி மற்றும் சேவைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றோடு தமிழ்நாடு அதன் மக்கள்தொகை சார்ந்த அனுகூலங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (ஐடிஇஎஸ்), தளவாடங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற துறைகளை விரிவுபடுத்துவதற்கான வணிகச் சூழலை உருவாக்கி, குறைகடத்தி (செமிகண்டக்டர்) மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் துறைக்கான கொள்கைகளுடன் தமிழ்நாடு ஏற்கெனவே இந்த வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.