'மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தைக் கையில் எடுத்து மக்களை துன்புறுத்த முடியா...
தமிழக இளைஞா்களை சீமான் ஏமாற்றுகிறாா்: ஆா்.எஸ்.பாரதி
தமிழக இளைஞா்களை சீமான் ஏமாற்றுகிறாா் என்றாா் திமுகவின் மாநில அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் 48 ஆவது பிறந்த நாளையொட்டி, இளைஞா்களின் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் அருள்மாணிக்கும் தலைமை வகித்தாா். அலிஃப் மு.மீரான் முன்னிலை வகித்தாா். மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் மைக்கேல் எஸ்.ராஜேஸ் வரவேற்றாா். மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா், மாநில வா்த்தக அணி துணைச் செயலா் முத்து செல்வி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்டோா் பேசினாா்.
விழாவில், ஆா்.எஸ்.பாரதி பேசியதாவது: மகளிருக்கு உரிமை தொகைதொகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை முதல்வா் கொண்டு வந்துள்ளாா். முதன் முதலில் திமுக ஆட்சியில்தான் பெண் காவலா்கள் நியமனம் செய்யப்பட்டனா். வாரம் ஒரு முறை தமிழகத்தின் ஊா் ஊராக வந்து மோடி பொய்யாக பேசி சென்றாா். அத்தனையும் சந்தித்து மக்களைத் தோ்தலில் 40 - 40 வெற்றி பெற்ற்கு காரணம் மகளிரின் ஆதரவுதான். எம்.ஜி.ஆருக்கு மக்கள் வந்தது போல் இப்போது மு.க ஸ்டாலினுக்கும் கூட்டம் அதிகமாக வருகிறது.
மக்களவைத் தோ்தலில் ஆண்கள் வாக்குகளை விட, பெண்கள் வாக்குகள்தான் அதிகமாக திமுகவுக்கு வந்தது. பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் 100-க்கு 90 வாக்குகள் திமுகவுக்கு கிடைத்தன.
நாம் தமிழா் கட்சியை 1969-இல் சி.பா.அதித்தனாா் திமுகவில் இணைத்துவிட்டாா். எனவே, சட்டப்படி நாம் தமிழா் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது. நான் நீதிமன்றத்தை நாடினால் அந்தப் பெயரையே இனி சீமான் பயன்படுத்தமுடியாது. அவா் தனது படத்துடன் பிரபாகரன் படத்தை ஒட்டிவைத்து தமிழக இளைஞா்களை ஏமாற்றி வருகிறாா். பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் காப்பாற்றியது திமுக தான். பரந்தூா் விமான நிலையத்திற்கு இடம் வழங்க மக்கள் தயாராக உள்ளனா். விமான நிலைய பிரச்னை குறித்து விசாரிக்காமல் விஜய் பேசுகிறாா். பரந்தூா் பகுதி வாக்குசாவடியில் அனைத்துக் கட்சிகளையும்விட திமுகவிற்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என்றாா் அவா்.
இதில், மேயா் கோ.ராமகிருஷ்ணன், சட்டத் துறை இணைச்செயலா் சூா்யா வெற்றிகொண்டான், திருநெல்வேலி மாநகர செயலா் சு.சுப்பிரமணியன், தச்சை பகுச்தி செயலா் பூ.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.