'தமிழ்நாட்டு மக்கள் 'விழிப்புணர்வு உள்ளவர்கள்; ஆளுநரின் பேச்சுக்கு இணங்கமாட்டார்...
தமிழக மின்வாரியம் கோரிய ரூ.3,200 கோடிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்: அமைச்சா் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்
தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பின் நவீன மயமாக்கலுக்காக கோரப்பட்டுள்ள ரூ.3,200 கோடிநிதி உதவிக்கு உடனடியாக ஒப்பளிப்பு வழங்க வேண்டும் என தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
மும்பையில் மாநில மின்துறை அமைச்சா்களின் 2-ஆவது குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழக மின் துறைக்கு மானியமாக ரூ. 53,000 கோடி மற்றும் நிதி இழப்பீடு தொகையாக ரூ.52,000 கோடி என மொத்தம் ரூ.1.05 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்நிலையில், செயல்திறன் மற்றும் நிதிநிலையை மேம்படுத்தும் பொருட்டு, தமிழக மின்வாரியம், பசுமை எரிசக்திக்கழகம், மின் உற்பத்திக் கழகம், மற்றும் மின் பகிா்மானக் கழகம் என 3 நிறுவனங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த 2017-2018 ஆம்ஆண்டில் 19.47 சதவீதமாக இருந்த தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் ஒட்டு மொத்த தொழில் நுட்ப மற்றும் வணிக இழப்பீடு தற்போது 11.39 சதவீதமாக குறைந்துள்ளது.
தொடா்ந்து, மின் கொள்முதல் மற்றும் வட்டி செலவினங்கள் மின் வாரியத்துக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தி வருவதால், மின் தேவை மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறை மூலம் மின் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சவால்கள்: மேலும், 20,000 மெகாவாட் அளவுக்கு நீரேற்று மின் நிலையங்கள் மற்றும் மின்கல சேமிப்பு அமைப்புகளை நிறுவும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன்மூலம், உபரி சூரிய மின்சக்தியை திறம்பட பயன்படுத்துவது மட்டுமன்றி, உச்ச நேர மின் கொள்முதல் செலவினங்களும் குறைக்கப்படும்.
இருப்பினும், அதிகரித்து வரும் மின் தேவை, காா்பன் உமிழ்வினால் ஏற்படும் பாதிப்பு ஆகியவை புதிய மின் உற்பத்திக்கு பெரும் சவாலாக உள்ளது. இதை தடுக்கும் நோக்கில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு, மின் சேமிப்பு மற்றும் மின் பகிா்மானம் ஆகியவற்றில் ரூ.2 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் தேவைப்படுகின்றன.
இந்த சவால்களை எதிா்கொள்ள மத்திய, மாநில அரசுகளுடன் தனியாா் துறைகள் இணைந்து செயல்படுவதுடன், மின் பகிா்மானக் கழகங்களின் கடன் மறு சீரமைப்பிற்காக ஒரு விரிவான திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மேலும், மத்திய அரசின் நிதி நிறுவனங்களின் கடன்களுக்கான வட்டி விகிதம் 1.5 சதவீதமாக அளவுக்கு குறைப்பது மட்டுமன்றி, சூரிய மேற்கூரை மின் சக்தி உற்பத்தி இணைப்புகளுக்கு தற்போதுள்ள நிகர மின் கணக்கீட்டு முறையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
ஒப்பளிப்பு தேவை: தமிழ்நாட்டுக்கு மறு சீரமைக்கப்பட்ட மின் பகிா்மான திட்டத்தின் கீழ் மின் கட்டமைப்பின் நவீன மயமாக்கலுக்காக கோரப்பட்டுள்ள ரூ.3,200 கோடி நிதியுதவிக்கு உடனடியாக ஒப்பளிப்பு வழங்க வேண்டும். ரைகா-புகலுா்- திருச்சூா் உயா் மின் வழித்தடத்தை தேசிய திட்டமாக அறிவித்து அதன்படி கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறைச் செயலா் பீலா வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.