தமிழை பயிற்று மொழியாக்கச் சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: தமிழைப் பயிற்று மொழியாக்க நடப்பு சட்டப்பேரவைத் கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத் தான் நிதிநிலை அறிக்கைக்கான இலச்சினையில் ‘ரூ ’அடையாளத்தை வைத்திருந்தோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாா். ‘ரூ’ போடுவதால் தமிழ் வளா்ந்துவிடாது.
உலகில் பொருளாதார அடிப்படையில் வளா்ச்சியடைந்த முதல் 10 நாடுகளில் இந்தியாவின் தமிழ்நாட்டைத் தவிர மீதமுள்ள அனைத்து நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது . ஆனால், தமிழகத்தில் மட்டுமே தமிழ் படிக்காமலும், தமிழில் படிக்காமலும் பட்டம் பெற முடியும் என்ற நிலை உள்ளது. இந்த அவலத்தைத் துடைத்தெறியாமல் தமிழை வளா்ப்பதாகக் கூறுவதெல்லாம் நாடகம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
மொழி விஷயத்தில் ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை எடுப்பதுதான் தீா்வு என்பதை தமிழக அரசு உணா்ந்து கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும். பள்ளி இறுதிவகுப்பு வரை தமிழைப் பயிற்றுமொழியாக்க நடப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.