US: 'வானில் தெரிந்த மர்ம ட்ரோன்கள்' - என்ன சொல்கிறார் ட்ரம்ப்... உண்மையை மறைக்கி...
தமிழ்ச் சமூகத் திருமணங்கள்: ஊர் நாட்டாமையும் சின்னக் குடும்பனும்... தேவேந்திர குல வேளாளர் திருமணம்!
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
நெல்லை மாவட்டத்தில் கணிசமாய் வசிக்கும் சமூகத்தினர் தேவேந்திர குல வேளாளர்கள். முன்பு, இந்த சமூகத்தில் திருமணங்கள் எல்லாமே இரவில் தான் நடக்கும். எனினும் கடந்த முப்பது ஆண்டுகளில் இதில் பெரும் மாற்றம் நிகழ்ந்து தற்போது பகலில் பிற சமூகத்தினரைப்போல நடக்கத் துவங்கியுள்ளது. இந்த சமூகத்தில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த உழைப்புச் சாதியினராக இருப்பதால், பகலில் வயலில் வேலை செய்து விட்டு, அந்தி சாயும் நேரத்தில் வீடு திரும்புவர். அதன் பிறகே குளித்துக் கிளம்பி திருமண வீடுகளுக்குச் செல்லும் நடைமுறை உண்டு.
ஒரு திருமணம் என்றால், அந்த சமூகத்தில் உள்ள எல்லாக் குடும்பங்களும் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால், இரவு ஏழு மணிக்கு கல்யாண வீட்டு சாப்பாடு துவங்கும். ஒன்பது மணி வரை கூட இது நீடிக்கும். எல்லோரும் சாப்பிட்டு முடித்தபிறகே திருமண சடங்குகள் துவங்கும். இரவு பத்து மணிக்கு மேல் கூட துவங்குவதுண்டு. தற்போது இந்த நடைமுறை இல்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்த சமூகத்தில் மாப்பிள்ளை வீட்டுக் கல்யாணம்தான். கல்யாண செலவுகள் அனைத்துமே மாப்பிள்ளை வீட்டாரைச் சார்ந்தது. திருமண நாளிற்கு முதல் நாள் மணமகள் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறும். நிகழ்வில், மணமகள் ஊரைச் சேர்ந்த நாட்டாமையும், மணமகன் ஊரைச் சேர்ந்த நாட்டாமையும் சிறப்பு விருந்தினர்கள். உள்ளூரிலேயே பெண் எடுத்து விட்டால், ஒரே நாட்டாமை தான் கலந்து கொள்வார்.
மாப்பிள்ளை வீட்டார் தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, பழங்கள் இவற்றோடு பரிசப் பணமும் வைத்து பெண் வீட்டிற்கு செல்வார்கள். மணமகள் ஊரை சேர்ந்த நாட்டாமை இவர்களிடம் கேட்பார்: “ என்ன விசயமாய் வந்திருக்கீங்க ?”
மாப்பிள்ளை ஊர் நாட்டாமை சொல்வார், “ நாங்க பொண்ணு கேட்டு வந்திருக்கோம்.“
பெண் ஊர் நாட்டாமை உடனே மணப்பெண்ணின் தாய், தந்தையைப் பார்த்துக் கேட்பார் : “இன்ன மாதிரி இந்த ஊர்க்காரருக பொண்ணு கேட்டு வந்திருக்காக...உங்களுக்கு சம்மதம் தானா?” என்று.
அவர்கள் சம்மதம் என்று சொன்னவுடன், திருமணம் செய்து கொள்ளப்போகும் மணப்பெண்ணை வரச்சொல்லி, “இந்தத் திருமணத்தில் உனக்கு சம்மதம் தானா ம்மா ?” என்று கேட்பார்கள். அந்தப் பெண்ணும் சம்மதம் என்று சொன்னவுடன் மாப்பிள்ளை வீட்டார் வெற்றிலை, பாக்கு, பழங்கள் உள்ள தாம்பாளத் தட்டில் பரிச பணம் ஆயிரமோ, இரண்டாயிரமோ வைத்து பெண்ணின் தாய் மாமாவிடம் தருவார்கள். அதை மஞ்சள் தடவிய ஒரு துணியில் வைத்துக் கட்டி தாய் மாமன் தலையில் வைத்து பிடித்தபடி , மணப்பெண்ணின் தந்தையிடம் சென்று கொடுக்க வைப்பார்கள்.
அப்போது திருமண சடங்குகள் நடத்தும் உதவியாளர் சின்னக் குடும்பன் என்பவர் “பரிச பணம் வருது..பரிச பணம் வருது “ என்று சத்தமிட்டபடியே உடன் வருவார். பெண்ணின் தந்தை அந்த பரிசப் பணத்தை பெற்றுக்கொண்டவுடன் நிச்சயதார்த்தம் நிறைவு பெறுகிறது. மணமகளை ஊர்ப் பெரியவர்கள் திருநீறு பூசி ஆசிர்வதிப்பர். இதில் மணமகன் கலந்து கொள்வதில்லை. ஆனால், காலமாற்றத்தில் இப்போது நிச்சயதார்த்தத்தில் மணமகன் கலந்து கொள்கிறார்.
திருமணம் மாப்பிள்ளை ஊரில் நடக்கும் என்பதால், அன்றிரவே வண்டி பிடித்து கிளம்பி மாப்பிள்ளை ஊருக்கு சென்று விடுவார்கள்.
மறுநாள் திருமணம்.
மணமகன் குலதெய்வம் உள்ளூரில் இருந்தால், பொண்ணு, மாப்பிள்ளை இருவரும் அதிகாலையில் அங்கு சென்று மாலை மாற்றிக் கொண்டு வருவார்கள்.
திருமணத்தை நடத்தி வைப்பது மாப்பிள்ளை ஊரைச் சேர்ந்த நாட்டாமை. மாப்பிள்ளையோடு துணை மாப்பிள்ளை, பெண்ணோடு துணை பொண்ணு ஆகியோரும் நிற்பார்கள். மாப்பிள்ளையின் உடன் பிறந்த சகோதரி தாலி கட்டுவதில் உடன் இருப்பார். உடன் பிறந்த சகோதரி இல்லையெனில், சித்தப்பா, பெரியப்பா மகள் சகோதரி இருக்கலாம். இந்த சகோதரியே பெண்ணிற்கு தாலிக்கு தங்கம் எடுத்துத் தர வேண்டும். அரச இலை முகப்பு வைத்த அதை புஷ்பத் தாலி என்று சொல்வார்கள். இந்த சகோதரிக்கு மாப்பிள்ளை வீட்டார் புத்தாடை எடுத்துத் தர வேண்டும்.
தாம்பாளத்தில் உள்ள தாலிக் கயிறு பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் கட்ட வேண்டும் என்பதற்காக எடுத்து செல்லப்படும். இந்த நேரத்தில் பெண்கள் வாழ்த்துப் பாடல்கள் பாடுவார்கள். மணப்பெண்ணும், மணமகனும் புதிய பட்டு சேலையும், பட்டு வேட்டியும் கட்டி அழைத்து வரப்படுவார்கள். ஊர் நாட்டாமை தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுத்து கட்ட சொல்லுவார். இந்த நேரம் சின்னக் குடும்பன் சத்தமாய் சொல்வார் : “ மணமகன் திருப்பூட்டுதான்..திருப்பூட்டுதான்..”
கூட்டத்தில் உள்ள பெரியவர்கள் “ முக்காலும், முக்காலும் “ என்று பதில் சொல்வார்கள். ( அதை மூன்று முறை சொல்லுங்க என்று அர்த்தம் )
பெண்கள் குரவை இடுவார்கள். தற்போது திருமண வீடுகளில் மேளம் வந்து விட்டது.
திருமணம் முடிந்தவுடன், கும்பா சடங்கு என்றொரு சடங்கு உண்டு. பெரிய கும்பாவில் தண்ணீர் நிரப்பி, மணமகன், மணமகளை தங்கள் கைகளை அதில் விடச் சொல்லுவார்கள்.
இப்போது சின்ன குடும்பன் சத்தமிடுவார் “ கைக்கு நீர் பார்க்காங்க ..கைக்கு நீர் பார்க்காங்க “
மணமகன், மணமகள் இருவரிடையே தொடும் கூச்சம் போக வேண்டும் என்பதற்காக இந்த சடங்கு. இதன் பிறகு மணமகனும், மணமகளும் திருமண மேடையை மூன்று முறை சுற்றி வர வேண்டும்.
திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் மொய்ப் பணத்தை மணமக்கள் கையில் தருவதில்லை. வெளியே ஒரு நோட்டு போட்டு உறவினர் ஒருவர் எழுதி, பணக் கவரைப் பெற்றுக் கொள்வார்.
திருமண நாளிலேயே மணமக்கள் இருவரும் மாப்பிள்ளை வீட்டில் இரவில் வந்து விடுவர். சாந்தி முகூர்த்தம் என்று என்பதெல்லாம் அவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டியது தான்.. திரைப்படங்களில் காண்பிப்பது போல பால், பழம், பூ அலங்கார அறை போன்றவை எல்லாம் கிடையாது.
தவிர, திருமணத்திலும் வசதி, வாய்ப்பு பெருகிய சூழலில், தற்போது ஐயர் வைத்து மந்திரம் சொல்லி திருமணம் நடத்தும் வழக்கமும் சிலரிடம் வந்து விட்டது.
சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் இருந்தாலுமே, ஊர் நாட்டாமை தலைமையில்தான் திருமணம் நடத்துகிறார்கள்.
– இரா.நாறும்பூநாதன்