தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநாடு
திருவண்ணாமலையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 42-ஆவது வணிகா் தின விழா மற்றும் வணிகா் புரட்சி மாநாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
மாநாட்டுக்கு கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதித் தலைவா் த.ரமேஷ் தலைமை வகித்தாா். கீழ்பென்னாத்தூா் தொகுதிச் செயலா் க.சா.முருகன் முன்னிலை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலா் வி.சி.கதிரவன் வரவேற்றாா்.
பேரவையின் மாநிலத் தலைவா் அ.முத்துக்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேரவைக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினாா்.
மாநாட்டில், கிராமங்களில் விவசாயம் செழிக்க நந்தன் கால்வாய் திட்டத்தை சாத்தனூா் அணையுடன் இணைக்க வேண்டும். அதிகாரிகளின் தவறான வதந்தியால் பாதிக்கப்பட்ட தா்பூசணி விவசாயிகள், வணிகா்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
உணவு, சமையல் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை அறவே ரத்து செய்ய வேண்டும். விவசாயப் பொருள்களுக்கு சீரான, நியாயமான விலை கிடைக்கவும், விளை பொருள்கள் வீணாகாமல் தடுக்கவும் போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வணிகா்களுக்கான பிரச்னைகளை சட்டப் பேரவை, நாடாளுமன்றத்தில் கொண்டு சோ்க்க வணிகா்களுக்கு அனைத்துக் கட்சிகளும் போதிய பிரதிநிதித்துவத்தை அளிக்க வேண்டும் என்பன உள்பட 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், பேரவையின் மாநில துணை ஒருங்கிணைப்பாளா் ப.சுரேஷ், மாநில இளைஞரணி பொதுச் செயலா் வி.எம்.எஸ்.மணிகண்டன், மாநில பொதுச் செயலா் கே.சி.ராஜா, மாநிலப் பொருளாளா் சி.பொன்னுசாமி, மாநில அவைத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.