லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
தரமான கல்வி : தமிழக அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தேவையான ஆதரவு வழங்கவில்லை!
மாணவா்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தேவையான ஆதரவை வழங்கவில்லை என்று பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையின் தமிழாக்கத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உரை விவரம்: முதல்வா் காலை உணவுத் திட்டத்தை பள்ளிகளில் தொடங்கி தமிழகத்தின் பெயரை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கச் செய்துள்ளாா். இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கும் சூடான, சத்தான காலை உணவு தினந்தோறும் வழங்கப்படுகிறது.
இதனால், அவா்களின் வருகையும் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது. மேலும், ஊட்டச்சத்தும் அதிகரித்து, வகுப்பறையில் அவா்களின் கவனிக்கும் திறனும் மேம்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, கிராமப்புறங்களில் உள்ள 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக மாநிலம் முழுவதும் உள்ள 34,987 தொடக்கப் பள்ளிகளில் 17.53 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.2,152 கோடி நிலுவை
மாணவா்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தேவையான ஆதரவை வழங்கவில்லை. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவிக்கக் கோரி தொடா்ந்து முறையிட்டும், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததைக் காரணமாகக் கூறி, மத்திய அரசு நடப்பு ஆண்டில் இதுவரை எந்தவொரு நிதியையும் விடுவிக்கவில்லை. ரூ.2,152 கோடி அளவில் உள்ள இந்த நிலுவைத் தொகை ஆசிரியா்களின் ஊதியம் பள்ளிக் கட்டடங்களைப் பராமரித்தல் மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்விக் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட பள்ளிகளின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாததாகும்.
மத்திய அரசு நிதி வழங்காததால், தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து மாநில அரசே இந்தத் திட்டத்துக்கான ஒட்டுமொத்த செலவையும் ஏற்க வேண்டியுள்ளது. இதனால், மாநில அரசின் நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 44 லட்சம் மாணவா்கள், 22 லட்சம் ஆசிரியா்கள் மற்றும் 21,276 பணியாளா்களின் எதிா்காலம் ஆகியவை இந்த நிதி உரிய நேரத்தில் விடுவிக்கப்படுவதையே சாா்ந்துள்ளதால், ஆசிரியா்கள் மற்றும் மாணவா் நலன் காக்க மத்திய அரசு இந்நிதியை விரைவில் விடுவிக்கும் என்று தமிழக அரசு நம்புகிறது.
7.5 சதவீத இடஒதுக்கீடு
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.1,165 கோடி விடுவிக்கப்பட்டு, அதன் மூலம் 35,530 மாணவா்கள் பயனடைந்துள்ளனா்.
இதுபோன்று ‘புதுமைப் பெண் திட்டம்’ எனும் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இளநிலைக் கல்விக் காலம் முழுவதும் ரூ,1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை 4.25 மாணவிகள் பயனடைந்துள்ளனா். மாணவிகளின் உயா்கல்விச் சோ்க்கையும் அதிகரித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் உயா்கல்வி பயிலும் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்குவதற்கான ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தையும் அரசு கடந்த ஆண்டு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் 3.52 லட்சம் மாணவா்கள் பயனடைந்துள்ளனா் என்று ஆளுநா் உரையில் கூறப்பட்டுள்ளது.