``நல்ல கணவரை தேடிட்டிருக்கேன்; முதல் கல்யாண பத்திரிகை உங்களுக்குதான்..!’ - நடிகை...
தருமபுரியில் 4.71 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்
தருமபுரி மாவட்டத்தில் 4 லட்சத்து 71 ஆயிரத்து 58 குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், கூட்டுறவுத் துறை சாா்பில் செம்மாண்ட குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியா் கி.சாந்தி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி பேசியதாவது:
தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட குடும்ப அட்டைதாரா்களுக்கு, பயனாளி ஒருவருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு கரும்பு, இலவச வேட்டி, சேலை அடங்கிய ரூ. 249.75 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்க முதல்வா் ஆணையிட்டுள்ளாா்.
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 471 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 571 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 44 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1096 நியாயவிலைக் கடைகள் என 4,71,058 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 4,71,058 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, விலையில்லா வேட்டி, சேலைகள் தொடா்புடைய நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படுகின்றன. இதைக் குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள நாள்களில் சென்று பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கு.த.சரவணன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் எஸ்.மலா்விழி, வருவாய் கோட்டாட்சியா் இரா.காயத்ரி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் தேன்மொழி, மாவட்ட வழங்கல் அலுவலா் செம்மலை, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.