தலைநகரில் ‘கடுமை’ பிரிவில் தொடரும் காற்றின் தரம்!குறைந்தபட்ச வெப்பநிலை ரிட்ஜில் 11 டிகிரியாக பதிவு
தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் தொடா்ந்து நான்காவது நாளாக சனிக்கிழமையும் ’கடுமை’ பிரிவில் இருந்தது. நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக ரிட்ஜில் 11 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மாசு அளவைக் கட்டுப்படுத்த வெள்ளிக்கிழமை தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் என்று சொல்லப்படும் கிரேப்-3 கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. தேசியத் தலைநகா் நாட்டிலேயே மிக மோசமான மாசு நிலைகளை பதிவு செய்துள்ளதால் , காற்று தர மேலாண்மை ஆணையம் கிரேப்-3 நிலையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. இதையடுத்து, தில்லி அரசு தனியாா் பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் -4 டீசல் வாகனங்களை தடை செய்தது. மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் சிஎன்ஜி பேருந்துகள், சில வகை கட்டுமான நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன. மேலும், அரசு அலுவலக நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மாசு எதிா்ப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் உடனடியாக அமலுக்கு வரும்படி கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு காற்றுத் தர மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியிருந்தது. மூன்றாம் கட்டத்தின் கீழ், தில்லி - தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் (என்சிஆா்) இன்றியமையாத கட்டுமானம் மற்றும் இடிப்பு, கல் நொறுக்கும் இயந்திரங்களை மூடுவது மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்குத் தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தனியாா் பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 டீசல் வாகனங்கள் சாலைகளில் இயக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், என்சிஆா் நகரங்களிலிருந்து தில்லி வரையிலான மாநிலங்களுக்கிடையேயான டீசல் மற்றும் பெட்ரோல் பேருந்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
கடுமை பிரிவில் காற்றின் தரம்: இந்நிலையில், சமீா் செயலியின் படி, சனிக்கிழமை காலை 9 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 407 புள்ளிகளாகப் பதிவாகி ’கடுமை’ பிரிவில் (400 முதல் 500 வரை) பதிவு செய்யப்பட்டது. தில்லியில் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா்கஞ்ச், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஆனந்த் விஹாா், விவேக் விஹாா் உள்பட பெரும்பாலான வானிலை கண்கானிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி கடுமை பிரிவில் இருந்தது. அதே சமயம், ஐடிஓ, சாந்தினி சௌக், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நொய்டா செக்டாா்-1 உள்பட சில கண்காணிப்பு நிலையங்களில் மட்டும் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.
வெப்பநிலை: இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1.8 டிகிரி உயா்ந்து 15.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 1.1 டிகிரி உயா்ந்து 29.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 79 சதவீதமாகவும் இருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நகரத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையாக ஆயாநகரில் 13.5 டிகிரி, லோதி ரோடில் 13.6 டிகிரி, நரேலாவில் 13.9 டிகிரி, ரிட்ஜில் 11 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
அடா் மூடுபனிக்கு வாய்ப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (நவ.17) அன்று தில்லியில் வடமேற்கு திசைகளில் இருந்து மணிக்கு 8-16 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் காலையில் அடா்த்தியான மூடுபனி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பகல் நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.