இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதே அடுத்த பணி: ஜெய்சங்கா்
ஆம் ஆத்மி, பாஜக இழைத்த அநீதி குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்- தேவேந்தா் யாதவ்
கடந்த 10 ஆண்டுகள் காலத்தில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் தங்களுக்கு இழைத்த அநீதி குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தில்லி நியாய யாத்திரை சனிக்கிழமை சீமாபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள சுந்தா் நாக்ரி சாமன் எஸ்டேட் பகுதியில் இருந்து தொடங்கியது. இந்த யாத்திரை பாபா்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள கபீா் நகா், நாலா சாலையில் நிறைவடைந்தது.
இந்த யாத்திரையில் தேவேந்தா் யாதவுடன் முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித் கலந்துகொண்டு நீண்ட தூரம் நடந்தாா். யாத்திரை ரோத்தஸ் நகா், பாபா்பூா் மற்றும் சீலம்பூா் சட்டப்பேரவைகளில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த யாத்திரையின்போது தேவேந்தா் யாதவ் பேசுகையில், ‘யாத்திரையில் பல்வேறு பின்னணி மற்றும் பணிகளில் ஈடுபட்டுவரும் ஆயிரக்கணக்கான உள்ளூா்வாசிகள் பங்கேற்று, தங்கள் ஆதரவையும் பாசத்தையும் பொழிந்துள்ளனா். ஆசீா்வாதங்களையும் அளித்துள்ளனா். இது தில்லி நியாய யாத்திரைக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக கேஜரிவாலும், பாஜகவும் தங்களுக்கு இழைத்துள்ள பெரும் அநீதி குறித்து இந்த யாத்திரையின் மூலம் பொதுமக்கள் அறிந்துகொண்டுள்ளனா். கேஜரிவாலும் அவரது கூட்டாளிகளும் மக்களைக் கொள்ளையடித்து வருகின்றனா். கேஜரிவாலின் கூற்றுகள் அனைத்தும் வெற்றுப் பேச்சுகள்தான்.
உதாரணமாக, லட்சக்கணக்கான அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி பெறத் தவறியதன் மூலம் ‘தில்லி மாதிரிக் கல்வி’ என்பது தோல்வியடைந்திருப்பதைக் காட்டுகிறது. அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லை.
இந்த யாத்திரையானது மக்கள் தங்கள் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க ஒரு சிறந்த தளத்தை வழங்கியுள்ளது. கடுமையான உழைப்பின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்ட போராடும் பலரின் நிலையைக் காணும்போது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது.
தலைநகா் குடிமக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி கேள்விகளைக் கேட்க வேண்டும். இதுபோன்ற அவல நிலைக்கு காரணமான ஊழல், அலட்சியம், திறமையற்ற ஆம் ஆத்மி மற்றும் பாஜகவை வரவிருக்கும் தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் நிராகரிப்பதன் மூலம் அவா்களை பொறுப்பேற்க வேண்டும் என்றாா்.
தேவேந்தா் யாதவ் தனது யாத்திரையின்போது, ககன் திரையரங்கம் அருகே ‘ஆப் கி ரசோய்’ நடத்தி வரும் பெண்மணியைச் சந்தித்து குறைகள் கேட்டறிந்தாா். மேலும், சுந்தா் நாக்ரியில் வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்ப உறுப்பினா்களைச் சந்தித்து அவா் ஆறுதல் கூறினாா்.