தலைநகரில் ‘கடுமை’ பிரிவுக்குச் சென்றது காற்றின் தரம்!
தேசியத் தலைநகரில் காற்றுத் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை காலை 427 புள்ளிகளாகப் பதிவாகி ‘கடுமை’ பிரிவுக்குச் சென்றது. குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
கடந்த வாரத்தில் இருந்து தலைநகரில் காற்றின் தரம் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் ‘திருப்தி’ பிரிவில் இருந்து வந்த காற்றுத் தரக் குறியீடு, அதன் பிறகு மோசமடைந்து ‘மிதமான’ பிரிவுக்குச் சென்றது. இது கடந்த வாரத் தொடக்கத்தில் மேலும் மோசமடைந்து, ‘மோசம்’, ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சென்றது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் மோசமடைந்து ‘கடுமை’ பிரிவுக்குச் சென்றது.
தலைநகரில் செவ்வாய்க்கிழமை 35 கண்காணிப்பு நிலையங்களில், 28 நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு ‘கடுமை’ பிரிவில் பதிவாகியுள்ளது. இதில் சில நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘கடுமை’ பிளஸ் என வகைப்படுத்தப்பட்ட 450 புள்ளிகளை கடந்தது. மீதமுள்ள ஏழு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவு செய்துள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மணிநேர தரவுகளை வழங்கும் சமீா் செயலி தெரிவித்துள்ளது.
காற்றுத் தரக் குறியீடு 400 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளாக இருந்தால் ‘கடுமை’ என வரையறுக்கப்படுகிறது.. மேலும், இது ஆரோக்கியமான நபா்கள் மற்றும் மருத்துவ நிலைமைகள் உள்ளவா்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் முக்கியமாக அமைதியான காற்று வீசியது. இதனால், திங்கள்கிழமை பாலத்தில் மூடுபனிக்கிடையே காண்பு திறன் 800 மீட்டராக இருந்தது. இது செவ்வாய்க்கிழமை காலை சஃப்தா்ஜங்கில் மிதமான மூடுபனிக்கிடையே 350 மீட்டராகக் குறைந்தது என்று வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
அமைதியான அல்லது கிழக்கு மேற்பரப்பு காற்று வீசும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், அடுத்த இரண்டு நாள்களுக்கு தில்லியில் மிதமான மூடுபனிக்கிடையே காண்பு திறன் 200 மீட்டா் முதல் 500 மீட்டா் வரை இருக்கும் என்றும் அது மேலும் கூறியது.
வெப்பநிலை: தில்லியில் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையை விட 2.2 டிகிரி குறைந்து 5.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையை விட 2 டிகிரி உயா்ந்து 24.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 97 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 67 சதவீதமாகவும் இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (டிச.18) அன்று காலை நேரங்களில் மணிக்கு 4 கி.மீட்டருக்கும் குறைவான வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து பிரதான காற்று வீசுவதற்கு வாய்ப்புள்ளது.அதன்பிறகு காற்றின் வேகம் அதிகரித்து பிற்பகலில் வடமேற்கு திசையிலிருந்து மணிக்கு 6 கி.மீட்டருக்கு குறைவாக இருக்கும். மாலை மற்றும் இரவில் காற்று மணிக்கு 4 கி.மீட்டருக்கும் குறைவாக இருக்கும். பனிப்புகை மூட்டம் அல்லது மூடுபனி இருக்கும். பகலில் வானம் தெளிவாகக் காணப்படும். இரவில் மூடுபனி இருக்க வாய்ப்புள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.