தவெக: ``தம்பி விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருப்பதால் அப்படிப் பேசியிருக்கிறார்" - குஷ்பு
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பிறகு பல்வேறு மின்சாதனங்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலை குறைந்திருக்கிறது.
மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவை பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டிவருகின்றனர்.
அதே நேரம், காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள், 'இவ்வளவு ஜிஎஸ்டியைக் குறைத்திருக்கிறோம் எனப் பெருமை பேசும் மத்திய பா.ஜ.க அரசு, இவ்வளவு வரிகளை விதித்தது ஏன்?' என்ற கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு, ``மத்திய அரசு மக்களுக்காகத்தான் ஜி.எஸ்.டி வரியைக் குறைத்திருக்கிறது.
இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 330 மருந்துகளுக்கு 0 ஜிஎஸ்டி வரி. மக்கள் சிறப்பாக வாழ வேண்டும், அதிக பணத்தைச் சேமிக்க வேண்டும் என இந்த முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது.
நாமெல்லாம் சேர்ந்து பிரதமர் மோடிக்கும் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
மீனவர்கள் விவகாரத்தில் மத்திய பாஜக அரசானது, தமிழ்நாட்டை வேறு மாநிலமாக நினைத்து இரண்டு நிலைப்பாடு எடுக்கிறது என நடிகர் விஜய் நாகப்பட்டினத்தில் பேசியிருக்கிறார்.
தம்பி புதிதாக அரசியலுக்கு வந்திருப்பதால் அப்படிப் பேசியிருக்கிறார். ஒரு சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றால் அது தமிழக மீனவர்கள் வேறு மாநில மீனவர்கள் என்றெல்லாம் கிடையாது. இந்தியா முழுவதும் ஒரே சட்டம்தான்.
விஜய் கொஞ்சம் தெரிந்துகொண்டு பேச வேண்டும். விஜய் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மட்டும்தான் வைத்து வருகிறார்.
அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவர் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் வருகிறது என்பதைப் பார்க்கலாம். அவர் வரட்டும் பேசலாம்" எனப் பேசியுள்ளார்.