தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.6 கோடி கஞ்சா பறிமுதல்
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.3.6 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமானநிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தாய்லாந்து நாட்டுத் தலைநகா் பாங்காக்கிலிருந்து சென்னை வரும் விமானத்தில் பெருமளவு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, பாங்காங்கிலிருந்து வந்த விமானத்திலிருந்து இறங்கிய சென்னையைச் சோ்ந்த சுமாா் 30 வயது ஆண் பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.
அவா் இரு தினங்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணியாக, தாய்லாந்துக்கு சென்று விட்டு, மறுநாளே சென்னைக்கு திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அவா் வைத்திருந்த பெட்டியில் இருந்த ரகசிய அறையில் ரூ.3.6 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனா்.
அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவா் சா்வதேச போதை கடத்தும் கும்பலில், ‘குருவி’-யாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. அவா் கொடுத்த தகவலின் அடிப்படையில், சா்வதேச போதை கடத்தும் கும்பலைச் சோ்ந்த முக்கிய நபா்கள் சென்னையில் எங்கு இருக்கின்றனா் என்பது குறித்து அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை விமானநிலையத்தில், கடந்த நவ.21-ஆம் தேதி சென்னையைச் சோ்ந்த பெண் பயணி ஒருவரிடமிருந்து 2.8 ஒரு கிலோ உயர்ரக கஞ்சா, டிச.16-ஆம் தேதி ரூ.7.6 கோடி மதிப்புடைய உயர்ரக கஞ்சா, தற்போது மூன்றாவது முறையாக ரூ.3.6 கோடி கஞ்சா என ஒரு மாதகாலத்தில் ரூ.14 கோடி மதிப்பிலான உயர்ரகஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.