தாலிபன்: இந்தியாவில் ஆப்கன் அமைச்சர்; கொடியில் குழப்பம் - வருகையின் பின்னணி என்ன?
ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபன் அமைச்சர் அமிர் கான் முத்தாகி டெல்லி வந்தடைந்துள்ளது பிராந்திய அரசியலில் முக்கியமான தருணமாக பார்ப்படுகிறது.
ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் முத்தாகிக்கு பயண விலக்கு அளித்துள்ளது. 2021ம் ஆண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து பின்வாங்கியது முதல் தாலிபன்கள் ஆட்சியை நடத்தி வருகின்றனர்.
அதன்பிறகான தாலிபன் உயர் மட்ட தலைவரின் முதல் இந்திய வருகை இதுவாகும். இந்த சந்திப்பில் அவர் வெளியுறவு அமைச்சர் (EAM) S ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் ஆகியோரைச் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்பில் சிறிய கொடி குழப்பம் உள்ளது.

இந்தியா தாலிபன் இடையே அரசியல் இடைவெளி குறைந்துவருவதனால் இந்த சந்திப்பு முக்கியமானது. இதில் ஏற்படும் முன்னேற்றங்களை பாகிஸ்தான் உற்று கவனிக்கும்.
கொடி குழப்பம்
இரு நாட்டு தலைவர்களுக்கும் சந்திப்பை ஏற்பாடு செய்வதில் அதிகாரிகளுக்கு கொடிக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இருநாட்டு பிரதிநிதிகள் பேசும்போது கொடிகள் இரண்டும் தலைவர்களுக்கு பின்னால் அல்லது மேசையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பது வழக்கமான நெறிமுறை.
இந்தியா, ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன், அவர்கள் கொடியையும் அங்கீகரிக்கவில்லை. இதனால் டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் தாலிபன் கொடிக்கு பதிலாக முந்தைய ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு கொடியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கானியின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கொடியாகும்.
முன்னதாக இந்திய - ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இடையிலான சந்திப்புகளில் தாலிபன் கொடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவை இந்தியாவில் நடைபெற்றவை அல்ல. இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி - அமிர் கான் முத்தாகி இடையேயான சந்திப்பின் போது, அதிகாரிகள் பின்னணியில் எந்தக் கொடியையும் வைக்காமல் பிரச்னையை சமாளித்தனர். (மூவர்ணக் கொடியும் இல்லை தாலிபன் கொடியும் இல்லை). ஆனால் இந்தமுறை டெல்லியில் சந்திப்பு நடப்பதனால் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொருத்திருந்தே காண வேண்டும்.
அமிர் கான் முத்தாகி சந்திப்பின் முக்கியத்துவம்
வரலாற்றுப்பூர்வமாக இந்தியா - ஆப்கானிஸ்தான் நட்பு நாடுகளாக இருந்தாலும், 2021ம் ஆண்டு தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தபிறகு இந்தியா காபூலில் இருந்து தூதரகத்தை வெளியேற்றியது. பின்னர் வர்த்தகம் மற்றும் மருந்து/மனிதாபிமான உதவிகளை வழங்க சிறிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது. தாலிபன் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக ஏற்காவிட்டாலும், தற்போது படிப்படியாக தாலிபன் அதிகாரிகள், அமைச்சர்களுடன் சந்திப்புகளை நடத்துவதன் மூலம் இருநாட்டு நட்புறவு மீண்டும் உயிர் பெறுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு இராணுவக்கட்டமைப்பை நிலைநிறுத்தும்படியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தாலிபன்கள் பாக்ராம் விமானப்பட தளத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறினார். ரஷ்யா, சீனா உள்ளிட்ட 7 நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் ட்ரம்ப்பின் கருத்தை எதிர்த்தது.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை தாலிபன் அரசு கண்டித்திருந்தது. மேலும் அண்டை நாடுகளில் தீவிரவாத செயல்பாடுகளால் அவதி ஏற்படுவதாகவும் தாலிபன் அரசு கூறியிருந்தது. ஆப்கானிஸ்தான் மண்ணில் தீவிரவாத சக்திகள் கூடாது என இந்தியா தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதற்கிடையே அமிர் கான் முத்தாகி இந்திய அதிகாரிகளைச் சந்திப்பது முக்கிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.