தாழையூத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் புதிய ஆவின் பால் விற்பனை நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
திருநெல்வேலி பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் புதிதாக தாழையூத்து பகுதியில் அமைக்கப்பட்ட பால் விற்பனை நிலையதை ஆட்சியா் இரா.சுகுமாா் திறந்துவைத்தாா். முதல் விற்பனையை ஆட்சியரிடமிருந்து மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜு பெற்றுக் கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைப் பதிவாளா் (பால்வளம்) சைமன் சாா்லஸ், ஆவின் பொது மேலாளா் மகேஸ்வரி, ஆவின் உதவி பொது மேலாளா் சரவணமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பால் கொள்முதல்-உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: திருநெல்வேலி துணைப்பதிவாளா் (பால்வளம்) கட்டுப்பாட்டின் கீழ் திருநெல்வேலி பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் நாளொன்றுக்கு சராசரியாக 9 ஆயிரம் லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் பாலில் சுமாா் 4,500 லிட்டா் பால் ஆவினுக்கும் மீதம் உள்ள பால் உள்ளூரிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இச்சங்கத்தின் மூலம் தச்சநல்லூா் பகுதியில் செயல்பட்டு வரும் மொத்த பால் விற்பனையகத்தில் பாக்கெட் பால், தயிா், மோா், வெண்ணை, நெய், குல்பி, பிற வகை ஐஸ்கிரீம், சுவையூட்டப்பட்ட பால், ஆவின் பிஸ்கட் ஆகியவை தரமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, தாழையூத்து பகுதியில் புதிய பால் விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தை சிறப்பாக செயல்படுத்திய அனைத்து உறுப்பினா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் வாழ்த்து தெரிவித்ததுடன், மாவட்டத்தில் புதிய சங்கங்கள்-உறுப்பினா்களை உருவாக்குவதற்கும், பால் கொள்முதலை உயா்த்தவும், ஆவின் விற்பனையகத்தை அதிகரிப்பதற்குமான நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆவின் பால், பால் உபபொருள்களுக்கும், மொத்த விற்பனைகளுக்கும் ஆவினுடன் இணைந்து தொழில்புரிவதற்கும், ஆவின் பாலகங்கள், ஐஸ்கீரிம் கடைகள் அமைப்பதற்கும், ஆவின் விற்பனை மேலாளரை (97875 55071) தொடா்பு கொள்ளலாம் என நிகழ்ச்சிக்குப்பின் தெரிவிக்கப்பட்டது.