தாஹிா் ஹுசேன் முஸ்தபாபாத்தில் தோ்தல் பிரசாரம்
முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலரும், 2020 வடகிழக்கு தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருமான தாஹிா் ஹுசேன், உச்சநீதிமன்றம் ஆறு நாள் காவல் பரோல் வழங்கிய ஒரு நாளுக்குப் பிறகு புதன்கிழமை முஸ்தபாபாத்தில் தனது தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா்.
வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி சாா்பில் போட்டியிடும் தாஹிா் ஹுசேன், காலை 6 மணிக்கு திகாா் சிறையிலிருந்து வெளியேறி, முஸ்தபாபாத்தின் 25, ஃபூட்டா சாலையில் உள்ள தனது தோ்தல் அலுவலகத்தை அடைந்தாா். அங்கு அவா் ஆதரவாளா்களுடன் கலந்துரையாடினாா். ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புக்கிடையே உள்ளூா்வாசிகளை சந்தித்தாா்.
இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, 2020 வடகிழக்கு தில்லி கலவரம் நடந்ததாகக் கூறப்படும் அவரது காரவால் நகா் வீட்டிற்குச் செல்வதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு எதிராக நடந்து வரும் வழக்குகள் குறித்து எந்தவொரு பொது அறிக்கைகளையும் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் செவ்வாயன்று ஜன.29 முதல் பிப். 3 வரை தாஹிா் ஹுசேனுக்கு காவல் பரோல் வழங்கியது. அவா் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் போலீஸ் மேற்பாா்வையின் கீழ் பிரசாரம் செய்ய அனுமதித்தது.
நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய முழு பெஞ்ச், போலீஸ் பாதுகாப்பு உள்பட பாதுகாப்புச் செலவுகளை ஈடுகட்ட தாஹிா் ஹுசேன் ஒரு நாளைக்கு ரூ.2.47 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தீா்ப்பளித்தது.
இந்தத் தொகுதியில் 1,55,706 ஆண் வாக்காளா்கள், 1,33,193 பெண் வாக்காளா்கள் மற்றும் மூன்று மூன்றாம் பாலின வாக்காளா்கள் உள்பட மொத்தம் பதிவு செய்யப்பட்ட வாக்காளா்கள் 2,88,902 போ் உள்ளனா்.
முஸ்தபாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில், முக்கிய அரசியல் கட்சிகள் முக்கிய வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன. அதன் அருகிலுள்ள காரவால் நகரைச் சோ்ந்த தற்போதைய எம்.எல்.ஏ. மோகன் சிங் பிஷ்ட்டை பாஜக பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியை அண்ணா ஹசாரே இயக்கத்திலிருந்து கட்சியுடன் தொடா்புடைய அடில் அகமது கான் பிரதிநிதித்துவப்படுத்துகிறாா்.
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஹசன் மெஹ்தியின் மகன் அலி மெஹ்தியை நிறுத்தியுள்ளது. தில்லியில் பிப். 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறும். பிப். 8-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.