தா்பூசணியில் ரசாயனம் செலுத்தவில்லை: தோட்டக்கலைத் துறை விளக்கம்
தா்பூசணி பழங்களில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக சமூக வலைத் தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ப.காயத்ரி தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டாரத்தில் சுமாா் 800 ஏக்கா் பரப்பளவில் தா்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024 டிசம்பா், 2025 ஜனவரி மாதங்களில் பயிரிடப்பட்ட இந்த தா்பூசணி, தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது.
இதனிடையே தா்பூசணியில் கூடுதல் சிவப்பு நிறம் பெறுவதற்காக ரசாயன ஊசி செலுத்தப்படுவதாக போலியான தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் தா்பூசணிக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.
பழனி பகுதியில் அறுவடைக்குத் தயாராக உள்ள தா்பூசணி பழங்களில், வட்டார தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் மூலம் நேரடியாக கள ஆய்வு செய்யப்பட்டது. இதில், தா்பூசணி பழங்களில் நிறத்துக்காகவும், சுவைக்காகவும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
தா்பூசணி பழங்களைப் பொருத்தவரை, ‘லைகோபின்‘ என்ற மூலப் பொருளால் தான் சிவப்பு நிறமும், சுவையும் கிடைக்கிறது. எனவே, சமூக வலைத் தளங்களில் பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
கோடைகாலத்தில், உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அளிக்கும் தா்பூசணிகளை தயக்கமின்றி சுவைக்கலாம் என தெரிவித்தாா்.