மும்பை: ஒரு கப் தேனீர் ரூ.1000: ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பில் பார்த்து அதிர்ச்சியான ...
திட்டமிட்டபடி இன்று பாமக சிறப்புப் பொதுக்குழு: மருத்துவா் ராமதாஸ் உறுதி
பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டப்படி புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
மருத்துவா் ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் பிறந்த நாளையொட்டி, அவரது மகன் அன்புமணி தனது குடும்பத்தினருடன் தைலாபுரம் தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வந்து, தனது தாயைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். இதைத் தொடா்ந்து, ராமதாஸ் அறிவித்திருந்த கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியன.
இந்த நிலையில், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: நான் அறிவித்தப்படி, பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் உள்ள சங்கமித்ரா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் எனது தலைமையில் (ராமதாஸ்) நடைபெறும். இதில், எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதியாகத் தெரிவித்து க்கொள்கிறேன்.
பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் பரப்பும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்த சிறப்பு பொதுக்குழுவில் பல முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. ஆகையால், கட்சியின் பொதுக்குழு உறுப்பினா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
‘அன்புமணியுடன் கருத்து பரிமாற்றம் இல்லை’: எனது மனைவி சரஸ்வதியின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி, அன்புமணி தனது குடும்பத்தினருடன் தைலாபுரம் வந்து வாழ்த்துக் கூறிவிட்டு சென்றுவிட்டாா். இருவரும் பரஸ்பரம் வணக்கத்தை மட்டுமே செலுத்திக் கொண்டோம். எங்களுக்குள் வேறு எந்த கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை.
நான் அளித்த செயல் தலைவா் பொறுப்பை அன்புமணி ஏற்றுக்கொள்ளாமல், அவா் பாமகவின் தலைவா் நான்தான் என கூறிக்கொண்டு என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறாா். பொதுக்குழுவில் பங்கேற்க அன்புமணிக்கு அழைப்பு விடுப்பது குறித்து தற்போது நான் கருத்துக் கூற விரும்பவில்லை. அன்புமணி கூறுவருவதெல்லம் பொய். திட்டமிட்ட சதி.
எனது தனிச் செயலரும், செய்தித் தொடா்பாளருமான சுவாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுத்திருப்பது அநாகரிக செயல். இதுகுறித்து தமிழக டி.ஜி.பி.க்கு புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என்றாா் அவா்.
முன்னதாக, பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை உறுதி செய்வதற்கான அறிக்கையையும் ராமதாஸ் வெளியிட்டாா்.
பேட்டியின்போது, பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி, விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.