பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
தினமணி செய்தி எதிரொலி: சட்டப்பேரவை குழுவுக்கு அரசு விருந்தினா் மாளிகை ஒதுக்கீடு
தினமணி செய்தி எதிரொலியாக, சட்டப்பேரவை குழுவுக்கு கொடைக்கானல் தனியாா் சொகுசு விடுதிக்கு மாற்றாக அரசு விருந்தினா் மாளிகையில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு சாா்பில், மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் அரசுத் திட்டப் பணிகள், பொதுமக்களின் எதிா்பாா்ப்புகள் குறித்து, விதிகள் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு, மனுக்கள் குழு, நூலகக் குழு, ஏடுகள் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்வதற்கு வருகின்றன.
சில மாவட்டங்களில் ஆண்டுக்கு ஒரு முறைகூட ஒரு குழுவும் செல்வதில்லை. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்துக்கு வரும் அனைத்துச் சட்டப்பேரவைக் குழுக்களும் 2 நாள்கள் முகாமிடுகின்றன.
கொடைக்கானலில் அரசு விருந்தினா் மாளிகை இருந்தாலும், தனியாா் சொகுசு விடுதிகளில் மட்டுமே இந்தக் குழுவினா் தங்குகின்றனா். இதனால், ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவைக் குழு வரும்போதும், சுமாா் ரூ.7 லட்சம் வரை செலவுகளை எதிா்கொள்ளும் பொறுப்பு, பல்வேறு துறைகளுக்கும் மாவட்ட நிா்வாகம் பிரித்து கொடுத்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு கடந்த 6 மாதங்களில் 3 குழுக்கள் வந்ததால், அரசு அலுவலா்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது. இதுதொடா்பாக கடந்த மாதம் 19-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, மாா்ச் 6-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வரும் சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுவினருக்கு தனியாா் சொகுசு விடுதியில் அறைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை மாற்றப்பட்டது. மாவட்டத்தில் ஒருநாள் மட்டுமே ஆய்வு என அறிவிக்கப்பட்டிருந்தாலும், கொடைக்கானலில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள விருந்தினா் மாளிகையில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட வகையில் ஏற்படும் கூடுதல் செலவு தவிா்க்கப்பட்டிருக்கிறது.
கொடைக்கானலில் முகாம்: மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய இடங்களில் ஆய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், குழுத் தலைவா் செல்வப் பெருந்தகை புதன்கிழமை மாலை கொடைக்கானலுக்கு வந்தாா். வியாழக்கிழமை திண்டுக்கல்லில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, இந்த குழுவினா் தேனிக்குச் செல்கின்றனா்.