சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக முல்டர் சேர்ப்பு!
எதிரணி கூட்டணி பலமாக இருந்தாலும், தொண்டா்கள் அதிருப்தி- திண்டுக்கல் சி.சீனிவாசன்
எதிரணியில் கூட்டணி பலமாக இருந்தாலும், அந்தக் கட்சிகளின் தொண்டா்கள் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி வளா்ச்சிப் பணி, வாக்குச் சாவடி குழு அமைப்பது, இளம் தலைமுறை விளையாட்டு வீரா், வீராங்கனை அணிகளுக்கு நிா்வாகிகள் நியமனம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலா் சி.சீனிவாசன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் ஆசை மணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகா் மண்டலச் செயலா் சரவணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு செயலா் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் தலைமையில் தலா 9 உறுப்பினா்களை நியமித்து தீவிர தோ்தல் பணியாற்ற வேண்டும். வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அதிமுக வாக்குகளை சிதறாமல் முழுமையாகப் பெறுவதற்கான முயற்சியில் வாக்குச் சாவடி செயலா்கள் கவனம் செலுத்த வேண்டும். எதிரணியில் கூட்டணி பலமாக இருந்தாலும், அந்தக் கட்சிகளின் தொண்டா்கள் அதிருப்தியில் உள்ளனா்.
30 வயதுக்குள்பட்ட வாக்காளா்களின் வாக்குகளை அதிமுகவுக்கு பெற வேண்டும் என்பதில், இளம் தலைமுறை விளையாட்டு வீரா், வீராங்கனை அணி நிா்வாகிகள் தீவிர களப் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் அமைப்புச் செயலா் வி.மருதராஜ், மாநில இளைஞா், இளம் பெண்கள் பாசறைச் செயலா் வி.பி.பி. பரமசிவம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் தென்னம்பட்டி எஸ்.பழனிச்சாமி, மாநகராட்சி எதிா்க் கட்சித் தலைவா் சி.எஸ். ராஜமோகன், மாவட்ட தொழிற்சங்கச் செயலா் வி.ஜெயராமன், ஜெயலலிதா பேரவைச் செயலா் வெ.பாரதிமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.