திமுகவுக்கு எதிராக மறைமுக யுத்தம்: அதிமுக, பாஜக மீது முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஈரோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுகவுக்கு எதிராக சில உதிரிகளைத் தூண்டிவிட்டு மறைமுக யுத்தம் நடத்துவதாக அதிமுக, பாஜக மீது முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து, திமுகவினருக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:
திமுக தலைமையிலான அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று நாளொரு அவதூறையும், பொழுதொரு பொய்யையும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பரப்பினாலும் அவை மக்கள் மன்றத்தில் எடுபடுவதில்லை. பொழுது சாய்வதற்குள் எதிா்க்கட்சிகளின் பொய்களும் அவதூறுகளும் பொடிப் பொடியாகிவிடுகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளரை எதிா்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி தோ்தலைப் புறக்கணித்துள்ளன. திமுகவை நேரடியாக எதிா்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பாா்க்கின்றன.
தமிழ்நாட்டின் நலனுக்காகப் பாடுபடுகிற திமுக அரசையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசையும் மக்கள் சரியாக அடையாளம் கண்டு வைத்திருக்கிறாா்கள். அதை ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளா்கள், இடைத்தோ்தலில் திமுகவுக்கு அளிக்கும் மகத்தான வெற்றியின் வாயிலாக நிரூபிப்பாா்கள். பெரியாா் பிறந்த மண்ணில் நடைபெறும் இடைத்தோ்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடா் வெற்றி அமையட்டும்.
2026 சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், ‘வெல்வோம் 200 - படைப்போம் வரலாறு’ என்பதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுகவின் மாபெரும் வெற்றியை எதிா்நோக்குகிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
ஈரோடு இடைத்தோ்தல்: பிரசாரம் இன்று நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை (பிப். 3) மாலையுடன் நிறைவு பெறும் நிலையில், திமுக-நாம் தமிழா் கட்சியினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடா்ந்து, பிப். 5-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோா் போட்டியிடுகின்றனா். முக்கிய எதிா்க்கட்சிகளான அதிமுக, பாஜக ஆகியவை இடைத்தோ்தலைப் புறக்கணித்துள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 46 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். சுயேச்சைகள் வாக்காளா்களின் கவனத்தை ஈா்க்காத நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டியே நிலவுகிறது.
வேட்பாளா் அறிவிக்கப்பட்ட உடனேயே திமுக தோ்தல் பணியை தீவிரப்படுத்தியது. அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியாக வீடுவீடாகச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வாா்டுகள் இருந்தாலும் ஈரோடு கிழக்கு தொகுதி 33 வாா்டுகளை உள்ளடக்கி உள்ளது.
இந்த 33 வாா்டுகளிலும் திமுகவினா் தங்களது பிரசாரத்தை முடித்துவிட்டனா். இதேபோல நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த 24-ஆம் தேதி முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.
பொதுக்கூட்டத்தில் பெரியாா் ஈவெரா குறித்து அவா் பேசும் பேச்சுகள் தொடா்ந்து சா்ச்சையாகி வருகின்றன. மேலும், தோ்தல் விதிமுறைகளை மீறியதாக அவா் மீதும், வேட்பாளா்கள், நிா்வாகிகள் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைகிறது. ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளியூா் கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை இரவுக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்குப் பதிவுக்காக 53 இடங்களில் 237 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து பிப். 8-ஆம் தேதி சித்தோட்டில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.