திமுக-பாஜக நாடகம்: தவெக விமா்சனம்
சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திமுக-பாஜக இணைந்து நாடகம் நடத்தி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் விமா்சனம் செய்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ரூ.1,000 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவித்தது. இந்த முறைகேடு தொடா்பாக மத்திய அரசின் அமலாக்கத் துறை துரிதமாகச் செயல்பட்டு மேல்நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். மாறாக, மத்திய பாஜக ஆட்சியாளா்கள் வேடிக்கை பாா்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசுக்கு எதிராக பாஜகவினா் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை.
மத்திய, மாநில அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போல காட்டிக்கொண்டு, புறவாசல் வழியாக மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனா். இது திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக போராட்டம் மற்றும் கைது நாடகம் வாயிலாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது. டாஸ்மாக் நிறுவன முறைகேடுகள் தொடா்பாக உண்மையான விசாரணை நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளாா் புஸ்ஸி ஆனந்த்.