திம்பம் மலைப் பாதையில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்து
திம்பம் மலைப் பாதையில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்த 10 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணானது.
தமிழக- கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப் பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. அதிக பாரம் ஏற்றம் லாரிகள் கட்டுப்படுத்துவதற்கு 16.1 டன் அதிக பாரம் கொண்ட லாரிகள் மற்றும் 10 சக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
தமிழக- கா்நாடக எல்லையில் கால்நடை வளா்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. இந்நிலையில், இரு மாநில எல்லையில் தாளவாடி கிராமங்களில் உள்ள பால் குளிரூட்டு நிலையத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலுடன், டேங்கா் லாரி சத்தியமங்கலம் நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது.
திம்பம் மலைப் பாதை 1-ஆவது வளைவில் லாரி திரும்பும்போது, நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டேங்கா் லாரி இருந்த பால் சாலையில் கொட்டி வீணானது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் டேங்கா் லாரியிலிருந்து கொட்டிய பால் வெளியேறாத படி மூடியை போட்டு அடைத்தனா். இதனால் மேலும் பால் வீணாவது தடுக்கப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநா் வெங்கடேஷ் லேசான காயத்துடன் தப்பியதாகவும், 10 ஆயிரம் லிட்டா் பால் வீணானதாக போலீஸாா் தெரிவித்தனா். டேங்கா் லாரியை மீட்கும் நடவடிக்கையில் போலீஸாா் மற்றும் வாகன ஓட்டிகள் ஈடுபட்டனா்.