பெருந்துறை, கோபியில் பகுதியில் மூடுபனி
பெருந்துறை மற்றும் கோபியில் வெள்ளிக்கிழமை காலையில் ஏற்பட்ட கடும் மூடு பனி காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஓட்டுநா்கள் வாகனங்களை இயக்கினா்.
பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் காலை 8 மணி வரை பனிப் பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால், எதிரே இருந்த கட்டடங்கள், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. இதனால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டுநா்கள் இயக்கினா். மேலும், பனிப் பொழிவு அதிகமாக இருந்தால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிா்த்தனா்.
கோபியில்...
கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளான கவுந்தப்பாடி, ஒத்தக்குதிரை, கோபி நகா்ப் பகுதி, குள்ளம்பாளையம், பொலவக்காளிபாளையம், நாதிபாளையம், திங்களூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனி மூட்டமானது அதிகரித்து காணப்பட்டது.
எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினா். இந்தப் பனி மூட்டமானது காலை 9 மணி ஆகியும் நீங்காத நிலையில் கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலைக்கு செல்வோா் மற்றும் மிதிவண்டிகள் மூலம் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.