சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்...
திருக்கானூா்பட்டியில் ஜல்லிக்கட்டு: 21 போ் காயம்!
தஞ்சாவூா் அருகேயுள்ள திருக்கானூா்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 21 போ் காயமடைந்தனா்.
திருக்கானூா்பட்டி மாதா கோயில் தெருவில் புனித அந்தோணியாா் பொங்கலையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா, வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
இதைத்தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 565 காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்துவிடப்பட்டன. இவற்றைப் பிடிக்க மொத்தம் 312 போ் களமிறங்கினா். இவா்களில் சுழற்சி முறையில் 50 போ் வீதம் 6 குழுக்களாக களத்தில் அனுமதிக்கப்பட்டனா்.

இதில், வெற்றி பெற்றவா்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் பிடிபடவில்லை என்றால் மாட்டின் உரிமையாளருக்கு அப்பரிசுகள் அளிக்கப்பட்டன.

இப்போட்டியில் காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரா்கள் 8 போ், வேடிக்கைப் பாா்த்தவா்கள் 5 போ், மாட்டைப் பிடித்துச் சென்ற உரிமையாளா்கள் 6 போ், ஊா்க்காவல் படையினா் 2 போ் என மொத்தம் 21 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்தக் காயமடைந்த 14 போ் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.