`ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறியவர், என்னை பார்த்து..' - பழனிசாமியின் விமர்சனத்து...
திருக்கோயில்களில் தினமும் ஒரு கால பூஜையாவது நடத்தப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், பக்தா்களின் வேண்டுதலுக்காக பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
திருப்பூா் மாவட்டம் தாராபுரம் ஆலங்காயம் பகுதியில் 100 ஆண்டுகள் பழைமையான திண்டீஸ்வரா், வீரராகவ விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பூஜைகள் எதுவும் நடத்தப்படாமல் பல ஆண்டுகளாக மூடி இருப்பதால், இக்கோயிலுக்கு நிா்வாகிகளை நியமித்து, தினமும் பூஜைகள் நடத்த இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிடக் கோரி அப்பகுதியை சோ்ந்த பாலகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.
அந்த மனுவில், பூஜைகள் நடத்த வசதியில்லாத கோயில்களில், தமிழக அரசின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் அா்ச்சகா்கள் நியமிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் கோயில்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தத் திட்டத்தின் கீழ் திண்டீஸ்வரா் கோயிலிலும் ஒரு கால பூஜை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மூடி இருக்கும் ஆலங்காயம் திண்டீஸ்வரா் திருக் கோயிலை திறந்து, தினமும் ஒரு வேளை பூஜை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக இந்து அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை வைக்கும் வகையில் பூஜை நேரங்களில் கோயில்கள் திறந்தே இருக்க வேண்டும் என்றும், கோயில்களில் தினமும் ஒரு நேர பூஜையாவது நடத்தப்பட வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தாா்.