திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா், ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா், ஆய்வாளா் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப் பதிவு, புதுப்பித்தல், உரிமம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் வந்தது.
அதன் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினா் திடீா் சோதனையில் ஈடுபட்டு திருச்செங்கோடு போக்குவரத்து அலுவலா் (பொ) சரவணனிடமிருந்து ரூ. 10,400, ஆய்வாளா் பாமா பிரியாவிடமிருந்து ரூ. 9,450, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எல்காட் புகைப்படக்காரராக பணியாற்றும் பஷீா் அகமது என்பவரிடமிருந்து ரூ. 71,150, அலுவலகத்துக்குள் இருந்த புரோக்கா்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமானவா்களிடம் இருந்து ரூ. 61,900 என மொத்தம் ரூ. 1,42,500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன், போக்குவரத்து ஆய்வாளா் பாமா பிரியா, பஷீா் அகமது ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
எல்காட்டில் புகைப்படக்காரராக பணியாற்றிய பஷீா் அகமது இடமிருந்து நேரடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அலுவலகத்தின் மற்ற அறைகளில் ஆங்காங்கே இருந்த சிறு தொகைகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்தான் பொறுப்பு என்ற வகையில் அவா் மீதும், ஆய்வாளா் பாமா பிரியா வாகனத்திலிருந்து பணம் கைப்பற்றப்பட்டதாகவும், மேலும் அலுவலகத்தில் இருந்த புரோக்கா்கள், சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்தவா்களை சோதனை செய்த போது கிடைத்த பணத்தை வைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டிஎஸ்பி சுபாஷினி தெரிவித்தாா்.