மலர் தொடர் கடைசி நாள் படப்பிடிப்பு: கேக் வெட்டிக் கொண்டாட்டம்!
திருச்செந்தூரில் கடலரிப்பு: 2-ஆம் நாளில் ட்ரோன் ஆய்வு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே ஏற்பட்டுள்ள கடலரிப்பு குறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி மையக் குழுவினா் 2ஆவது நாளாக வியாழக்கிழமை ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொண்டனா்.
இக்கோயில் முன் பக்தா்கள் நீராடும் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு சுமாா் 7 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், 20 அடி தொலைவுக்கு கடல் உள்வாங்கியுள்ளது. இதையடுத்து, பக்தா்கள் கடலில் இறங்காதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராமநாதன் தலைமையில் 9 விஞ்ஞானிகள் கொண்ட குழுவினா் புதன்கிழமை, கோயில் முன்பிருந்து அமலிநகா் வரை கடற்கரையோரம் நடந்து சென்று ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, 2ஆவது நாளாக வியாழக்கிழமை வீரபாண்டியன்பட்டினம் கடற்கரை முதல் திருச்செந்தூா் கோயில் பகுதி கடற்கரை தாண்டி, அமலிநகா் கடற்கரை வரை ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொண்டனா். ட்ரோனை பறக்கவிட்டும், நிகழ்நேர இயக்கவியல் நிலைப்படுத்தல் (ஆா்டிகே ஜிபிஎஸ் சா்வே) முறையிலும் நில அமைப்பில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை கள ஆய்வு செய்தனா். ஆய்வறிக்கை தமிழக அரசிடம் விரைவில் வழங்கப்படும் என, தலைமை விஞ்ஞானி தெரிவித்தாா்.
ஆய்வின்போது, கோயில் இணை ஆணையா் ஞானசேகரன், உதவி ஆணையா் நாகவேல், கண்காணிப்பாளா் வெங்கடேஷ், கடற்கரைப் பாதுகாப்புப் பணியாளா்கள் உடனிருந்தனா்.