திருச்செந்தூரில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாரை நியமிக்க கோரிக்கை
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என, வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தைத் திருநாளை முன்னிட்டு, இக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவா்கள் நகருக்குள் நுழைந்ததும் மேளதாளம் முழங்க வேல்குத்தியும், காவடி எடுத்தும் வருவாா். பின்னா், மேலக் கோயிலான சிவன் கோயில் வாசலில் வணங்கி விட்டு சந்நிதித் தெரு வழியாக தூண்டுகை விநாயகா் கோயிலில் விடலை செலுத்திவிட்டும், ஒருசிலா் அங்கிருந்து பெரிய வேல் குத்தியும் முருகரை வழிபட வருவா். இதனால், பக்தா்கள் எந்தப் பாதையில் வந்தாலும், கோயிலுக்கு சந்நிதித் தெரு பாதையில் வந்து வழிபடுவதால் அதிகக் கூட்டமிருக்கும்.
இந்நிலையில், சில நாள்களாக பாதயாத்திரையாக வருவோா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து காமராஜா் சாலையைக் கடந்து ரதவீதி வழியாக வரும்போது வாகன நெரிசலிலும், சந்நிதித் தெருவில் இருசக்கர வாகனங்கள், கூட்ட நெரிசலையும் கடந்து செல்கின்றனா். அதிலும், தூண்டுகை விநாயகா் கோயிலைச் சுற்றிவர முடியாமல் பக்தா்கள் வருவதால் அடிக்கடி தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.
தைத் திருநாளையொட்டி பக்தா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும், சந்நிதித் தெரு, தூண்டுகை விநாயகா் கோயில் பகுதிகளில் கூடுதல் போலீஸாரை நியமித்து பக்தா்களை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பாக அனுப்பவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வணிகா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.