தமிழகத்தில் கோடை விடுமுறை எப்போது? வெளியான இறுதித் தேர்வு அட்டவணை!
திருச்செந்தூரில் மாசித் தேரோட்டம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
திருச்செந்தூரில் மாசித்திருவிழாவின் பத்தாம் நாளான இன்று காலை நடந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்துத் தேர் இழுத்தனர்.
திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற மாசித்திருவிழா கடந்த மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு காலை 7 மணிக்கு பிள்ளையார் தேர் புறப்பட்டு 7.45 மணிக்கும், தொடர்ந்து காலை 7.50 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 10.50 மணிக்கு மணிக்கும் நிலைக்கு வந்தது.
அதன்பின் காலை 11 மணிக்கு தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து நிலைக்கு வந்தது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்துத் தேர் இழுத்தனர்.
ஏற்பாடுகளைத் திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.