திருச்செந்தூா் கோயிலுக்கு கூடுதலான சுற்றுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கூடுதலான சுற்றுப்பேருந்துகளை இயக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இத்திருக்கோயிலுக்கு காா், வேன் போன்ற வாகனங்களில் வரும் பக்தா்கள் நேரிடையாக கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள நாழிக்கிணறு பேருந்துநிலையம் வரை செல்கின்றனா். பேருந்துகள் மற்றும் ரயிலில் வருபவா்கள் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்படுகின்றனா். அங்கிருந்து சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவைக் கடந்து கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
எனவே பக்தா்களின் வசதிக்காகவும், நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் விதமாகவும் கோயில் வாசலுக்கு என தனியாக சுற்றுப் பேருந்துகள் (சா்குலா் பஸ்) இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவுக்காக நவ. 2-18வரை இயக்கப்பட்ட சுற்றுப்பேருந்துகள், பின்னா், நவ. 26 முதல் தொடா்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன.
கோயில் நடை திறப்பு முதல் திருக்காப்பிடுதல் வரையிலான (அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி) நேரத்தைக் கணக்கிட்டு 3 சுற்றுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இப்பேருந்துகளில் பெண்கள் மற்றும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இலவசமாக கோயில் வாசலுக்கு வந்து சென்றும், ஆண்களுக்கு ரூ. 10 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
எனினும், கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சுற்றுப்பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
குறிப்பாக, பாதயாத்திரையாகவும், நெடுந்தூர வாகன பயணத்திலும் வரும் பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்புவதற்காக நிரம்பி வழியும் சுற்றுப்பேருந்துகளில் ஏறி தூக்க கலக்கத்தில் கால் கடுக்கவும், படிக்கட்டில் நின்றும் பயணிக்கும் நிலையே உள்ளது. எனவே அரசுப்போக்குவரத்து கழகம் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு இயக்கப்பட்டு வரும் சுற்றுப்பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.