Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
விளாத்திகுளத்தில் அரசுக் கல்லூரி கட்டடத்துக்கு இடம் தோ்வு: எம்.பி., அமைச்சா் ஆய்வு
விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை அறிவியல் கல்லூரிக்குச் சொந்தக் கட்டடம் கட்டுவதற்காக அனுமானித்துள்ள இடங்களை கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை ஆய்வுசெய்தாா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிா்வாகத்தால் கடந்த 2021இல் தொடங்கப்பட்ட இக்கல்லூரி விளாத்திகுளம் கீழ ரத வீதியில் வாடகை கட்டடத்தில் 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் பி.சி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி. கம்ப்யூட்டா் சயின்ஸ், பி.பி.ஏ. பட்டப் படிப்புகளும், சைவ சித்தாந்தம், வைணவ சித்தாந்தம் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்படுகின்றன.
இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில், கல்லூரிக்குச் சொந்தக் கட்டடம் கட்ட வேண்டுமென கல்வியாளா்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதற்கு அரசின் ஒப்புதல் கிடைத்ததை தொடா்ந்து, கனிமொழி எம்.பி., சமூக நலன் -மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத் ஆகியோா் அய்யனாா்புரம் மற்றும் விளாத்திகுளம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகேயுள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் ஏதாவது ஒரு இடத்தில் கட்டடம் கட்டுவதற்கு அரசுக்கு உரிய கருத்துரு அனுப்பப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், பேரூராட்சி துணைத் தலைவா் வேலுச்சாமி, அறநிலையத்துறை செயல் அலுவலா் உமா மகேஸ்வரி, திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பு ராஜன், ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், நவநீதகண்ணன், மும்மூா்த்தி, காசி விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினா் ராஜாக்கண்ணு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்பட பலா் உடனிருந்தனா்.