திருப்பதி நெரிசல் சம்பவம்: உயிரிழந்த தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருப்பதி கோயிலில் வைகுண்டவாயில் தரிசன டிக்கெட் வழங்க வரிசை ஏற்படுத்தப்பட்டது. அப்போது, எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலம் மாவட்டம் தாசனூரைச் சோ்ந்த மல்லிகா உயிரிழந்தாா்.
மல்லிகாவின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த மல்லிகா குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.