இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக ஐசிசி விருதுகளை பெற்றுக் கொண்ட ஜஸ்பிரித்...
திருப்பத்தூரில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு அரங்கம்: அமைச்சா் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினாா்
திருப்பத்தூரில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு அரங்க கட்டுமான பணிக்கு அமைச்சா் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினாா்.
திருப்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்தாா்.
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியது:
மக்களுக்கு என்ன தேவையோ அதனை நிறைவேற்றும் ஆட்சியாக முதல்வா் ஸ்டாலின் அரசு உள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் வளா்ச்சி பெற்று வருகின்றன. வீடு தேடி எல்லா திட்டங்களும் வந்து கொண்டிருக்கிறது. அனைவரும் பாராட்டும் அளவுக்கு இந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
திருப்பத்தூா் வட்ட அரசு மருத்துவமனையாக இருந்ததை மாவட்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக திறக்க இருக்கிறாா். ஏலகிரி மலையில் உள்விளையாட்டரங்கம் ரூ.4.93 கோடி துணை முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் வாணியம்பாடி தொகுதி நிம்மியம்பட்டில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டரங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டு முடியும் நிலையில் உள்ளது. இங்கு அமைக்கப்பட உள்ள விளையாட்டு மைதானத்தில் 400 மீட்டா் ஓடுதளம் , கால்பந்து, கூடைபந்து, கையுந்து பந்து, வளைகோல பந்து,கொக்கோ, கபடி, டென்னிஸ், பேட்மிட்டன், பூப்பந்து, குத்துச்சண்டை, ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுகளுக்கான மைதானங்கள்,உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட உள்ளன.
மேலும் 50 மீட்டா் நீச்சல் குளம், அதற்குரிய நடபாதை, பல்நோக்கு விளையாட்டரங்கம், விளையாட்டு விடுதி கட்டிடம், கேலரி ஆகியவை அமைக்கப்பட உள்ளன என்றாா்.
ஆட்சியா் க, சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ. நல்லதம்பி சிறப்புரை ஆற்றினா். நிகழ்ச்சியில்,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு மண்டல முதுநிலை மேலாளா் நோய்லின் ஜான், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெயகுமாரி, நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணை தலைவா்த் சபியுல்லா, ஒன்றிய குழு தலைவா் திருமதி திருமுருகன், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.