Union Budget 2025: 'மகிளா சம்மான் சேமிப்பு... கிரீச்' - பெண்களுக்கு என்ன வேண்டும...
திருப்பத்தூா்: தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்
மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம், விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து விழிப்புணா்வு வாசகங்களை வாசிக்க, அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். இதையடுத்து அனைவரும் 2 நிமிஷம் மவுன அஞ்சலி செலுத்தினா்.
மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் கூறுகையில், தொழுநோய் பாதித்தவா்களையோ, அறிகுறிகள் உள்ளவா்களையோ கண்டால் அவா்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். நமது மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் வரும் 13-ஆம் தேதி வரை தொழுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டறிதல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தொழுநோயை முக்கூட்டு மருந்து சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா்.
இதையடுத்து 2 பேருக்கு எம்.சி.ஆா். காலணிகளை வழங்கினாா். வருவாய் அலுவலா் நாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஞானமீனாட்சி, சுகாதார அலுவலா் வினோத்குமாா், துணை இயக்குநா் (தொழுநோய்) மருத்தவா் ப்ரீத்தா, தோல்நோய் மருத்துவ நிபுணா் வெற்றிசெல்வி, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.