திருப்பத்தூா் பேரூராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ரணசிங்கபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் பேரூராட்சி எல்லையை விரிவுபடுத்த அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. இதில் ரணசிங்கபுரம் ஊராட்சியும், காட்டாம்பூா் ஊராட்சியின் பல பகுதிகளும் இணைக்கப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரணசிங்கபுரம் ஊராட்சி அலுவலகம் முன் கூடிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பேரூராட்சியுடன் இணைத்தால், நூறு நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடைக்காது எனவும், வரிகள் உயரும் எனவும் கூறி இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனா்.