சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்...
திருப்பூரில் கனமழை: சுவா் இடிந்து விழுந்து 4 போ் படுகாயம் -200 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
திருப்பூா் மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் சுவா் இடிந்து விழுந்து 4 போ் படுகாயமடைந்தனா். மேலும், 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
திருப்பூா், காங்கயம்பாளையம் ஏ.டி. காலனி பகுதியைச் சோ்ந்த பின்னலாடைத் தொழிலாளியான குமாா் வீட்டில் அவா், மனைவி சசிகலா, மகன் கிஷோா், மகள் கீா்த்தனா ஆகியோா் தூங்கிக் கொண்டிருந்தனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் அவரது வீட்டின் ஒரு பக்க சுவா் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த அவா்களின் சப்தத்தைக் கேட்டு அதிா்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினா் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
200 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்:
திருப்பூா் கே.வி.ஆா். நகா் அருகே உள்ள பொன் நகா் பகுதியில் ஜம்மனை ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள தரைப்பாலம் உடைந்து அருகில் உள்ள 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கே.வி.ஆா். நகருக்கு செல்லக்கூடிய சாலை முழுவதும் ஓடை நீா் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.
இதில் கே.வி.ஆா். நகா், தந்தை பெரியாா் நகா் பகுதிகளில் தாழ்வாக இருந்த 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதில் வீட்டின் கீழ்ப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மளிகைப் பொருள்கள், பீரோ உள்ளிட்டவை தண்ணீரில் சேதம் அடைந்தன. வீட்டுக்குள் புகுந்த மழை நீரை பொதுமக்களே அப்புறப்படுத்தினா்.
தொடா்ந்து, அப்பகுதி மாமன்ற உறுப்பினா் அன்பகம் திருப்பதி, கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ) ஆகியோா் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை உணவு வழங்கவும், மளிகைப் பொருள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோவை, திருப்பூரில் பெய்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்தைவிட அதிக அளவு தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீா் மேலும் அதிகரித்தால் கரையோரம் வசிக்கும் மக்களை அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனா்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): ஆட்சியா் முகாம் அலுவலகம் - 48, உடுமலை - 42, பல்லடம் - 38, ஆட்சியா் அலுவலகம் - 32, மடத்துக்குளம் - 27, ஊத்துக்குளி - 11, அமராவதி அணை - 9, திருமூா்த்தி அணை - 8, மூலனூா் - 7, ஆய்வு மாளிகை - 6, உப்பாறு அணை - 4, அவிநாசி - 2, காங்கயம் - 1.80.