செல்போனில் விடியோ பார்த்துக் கொண்டே சென்ற மாணவர்கள் மீது ரயில் மோதி ஒருவர் பலி
திருமணம் மீறிய உறவு; கண்டித்த மாமியார் உயிருடன் எரித்துக் கொலை... மருமகள் சிக்கியது எப்படி?
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தை அடுத்திருக்கும் என்.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், ராணி தம்பதியின் மகன் கருணாமூர்த்தி. கடலூர் அரசுக் கல்லூரியில் படித்த இவரும், அதே கல்லூரியில் படித்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்த சுவேதாவும் (வயது 23) காதலித்து வந்தனர். அதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு கருணாமூர்த்தி செங்கல்பட்டில் ஒரு தனியார் நிதி நிறுவனத்திலும், அவரின் தந்தை பாண்டியன் சென்னையிலும் தங்கி வேலை செய்து வந்ததால், என்.ஆர்.பாளையம் வீட்டில் சுவேதாவும், மாமியார் ராணியும் மட்டுமே இருந்தனர். இந்த நிலையில் தீபாவளிக்கு முதல் நாள் கடந்த அக்டோபர் 30-ம் தேதி இரவு, வீட்டின் வராந்தாவில் மாமியார் ராணியும், அறையில் சுவேதாவும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், அலற ஆரம்பித்தார் ராணி. அவரது அலறல் சத்தம் கேட்டு அறையை விட்டு வெளியே வந்த மருமகள் சுவேதா, `காப்பாத்துங்க… காப்பாத்துங்க…’ என்று அலற ஆரம்பித்தார். இருவரது அலறலையும் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ராணி மீதிருந்த தீயை அணைத்து, படுகாயங்களுடன் இருந்த அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் ராணிக்கு 80% சதவிகிதத்திற்கு மேல் தீக்காயங்கள் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி மறுநாள் 31-ம் தேதி உயிரிழந்தார் ராணி. அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வு சோதனையில், ராணி பெட்ரோல் ஊற்றி எரிந்தது தெரியவந்தது.
அதனால் தன்னுடைய தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ராணியின் இளைய மகனும், கருணாமூர்த்தியின் தம்பியுமான தட்சிணாமூர்த்தி, கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மருமகள் சுவேதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தன்னுடைய காதலனுடன் சேர்ந்து மாமியார் ராணியை, பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதையடுத்து சுவேதாவையும், எதிர்வீட்டில் வசித்து வந்த அவரது காதலன் சதீஷ் என்பவரையும், கண்டமங்கலம் போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். போலீஸாரிடம் சுவேதா அளித்த வாக்குமூலத்தில், ``எங்களது திருமணத்திற்கு பிறகு கணவர் கருணாமூர்த்தி செங்கல்பட்டில் தங்கி வேலை செய்தார்.
வீட்டில் நானும், மாமியாரும் மட்டுமே இருந்தோம். மாமியார் ராணியும் வேலைக்கு சென்றுவிடுவார் என்பதால், நான் மட்டுமே வீட்டில் தனியாக இருப்பேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்கள் எதிர் வீட்டிலிருந்த சதீஷ்குமார் என்பவர், என்னிடம் அன்பாக பேச ஆரம்பித்தார். அதையடுத்து நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். சதீஷ்குமார் என்னை அடிக்கடி அவரது பைக்கில் பாண்டிச்சேரிக்கு அழைத்துச் செல்வார். மாமியாரும் வேலைக்குச் சென்றுவிடுவார் என்பதால், காலையில் சென்றால் மாலைதான் இருவரும் வீட்டுக்கு வருவோம். அடிக்கடி நாங்கள் வீட்டிலும், வெளியிலும் தனிமையில் சந்தோஷமாக இருந்தோம். சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு நானும், காதலன் சதீஷ்குமாரும் வீட்டில் தனிமையில் இருந்தோம். அப்போது திடீரென வீட்டிற்கு வந்த என் மாமியார், நாங்கள் இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்துவிட்டார்.
அதையடுத்து என்னை கடுமையாக திட்டிய அவர், தீபாவளிக்கு ஊருக்கு வரும் என் கணவரிடம் இதுபற்றி கூறுவதாக தெரிவித்தார். அதுகுறித்து 30-ம் தேதி என் காதலன் சதீஷிடம் அதுகுறித்து கூறினேன். அப்போது மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடலாம் என்றும், அனைவரும் தற்கொலை என்று நினைத்துக் கொள்வார்கள் என்றும் கூறிய அவர், பெட்ரோல் வாங்குவதற்காக 500 ரூபாய் பணமும் கொடுத்தார். அந்த பணத்தில் இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கி, வீட்டில் மறைத்து வைத்தேன். அன்றைய தினமே, `தெரியாமல் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் மகனிடம் கூறி, எங்கள் வாழ்க்கையை வீணாக்கிடாதீங்க. தீபாவளிக்கு துணி எடுத்து வரலாம் வாங்க” என்று கூறி மாமியாரை, பாக்கம் கூட்டு ரோடுக்கு அழைத்துச் சென்றேன்.
அங்கு துணி எடுத்து கொண்டு, ஹோட்டலில் ஃபிரைடு ரைஸ் வாங்கிக் கொண்டு இரவு வீட்டுக்கு வந்தோம். அதையடுத்து ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த தூக்க மாத்திரையை தூளாக்கி ஃபிரைடு ரைஸில் கலந்து, மாமியாருக்கு கொடுத்தேன். அதை சாப்பிட்ட மாமியார் ராணி, உடனே தூங்கிவிட்டார். அதையடுத்து வீட்டுக்கும் வரும்படி சதீஷுக்கு போன் செய்தேன். இரவு 10 மணிக்கு வந்த அவர், வாங்கி வைத்திருந்த பெட்ரோலை தூங்கிக் கொண்டிருந்த மாமியார் மீது ஊற்றினார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த மாமியார் இலேசாக கண் விழித்தார். அவர் கண் விழித்தா காரியம் கெட்டுவிடும் என்று நினைத்த நான், உடனே அவர் மீது தீ வைத்துவிட்டு, சதீஷை அங்கிருந்து போகும்படி சொல்லிவிட்டேன். அதையடுத்து மாமியாருடன் சேர்ந்து நானும், `காப்பாத்துங்க… காப்பாத்துங்க… என்று கூச்சலிட்டேன்.
அதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.அவர்களுடன் ஒன்றும் தெரியாதது போல வந்த சதீஷ்குமாரும், சேர்ந்து மாமியாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எப்படி தீப்பிடித்தது என்று அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, எனக்கு தெரியாது நான் அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன் என்று கூறி அழுதேன். அதனால் என் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்று நினைத்திருந்தேன்” என்று கூறியிருக்கிறார். திருமணமான மூன்றே மாதத்தில், மாமியாரை மருமகளே உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம், கடலூரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb