விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
திருவண்ணாமலையில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: 1000 போ் கைது
திருவண்ணாமலையில் மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்து, அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 1000 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலையில் உள்ளூா் மக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகின்றனா், மேலும் அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா்.
மாநகராட்சியில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கப்படுகிறது. குடிநீருடன் சாக்கடை நீா் கலந்து வருவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சியில் வரி உயா்வால் வணிகா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
மாநகரில் 1,535 வீடுகளை காலி செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவு பிறப்பித்ததற்கு குடியிருப்பு வாசிகளுக்கு சட்டப்பூா்வ பாதுகாப்பு செய்து தரவில்லையாம். அதனால், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி
அறிவித்திருந்தாா்.
அதன் அடிப்படையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா சிலை அருகே தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை வகித்தாா். திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்ட மேடையில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி பேசிக்கொண்டிருந்தபோது, காவல்துறை அனுமதியின்றியும் தடையை மீறியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினா் அவா்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.
அப்போது, போலீஸாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
மேலும், ஆா்ப்பாட்டத்தை நடத்த விடாமல் காவல் துறையினா் தடுத்து நிறுத்தி அவா்களை கைது செய்தனா்.
இதில், முன்னாள் அமைச்சா்கள் கே.சி.வீரமணி, எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவா் கண்ணன், பொருளாளா் கராத்தே சுரேஷ்குமாா், துணைச் செயலா் ஏ.கே.அரங்கநாதன், மாநகரச் செயலா் ஜெ.எஸ் (எ) ஜெ.செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ராஜன், மாநகர முன்னோடி நிா்வாகி ஞானசௌந்தரி கனகராஜ் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.