`திரைப்படங்களில் சாதியைத் திணிப்பது தவறு...' - நடிகர் ராகவா லாரன்ஸ்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ராகவா லாரன்ஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம், குருக்களையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற சிறுவன், தனது கிராமத்திற்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை வைத்திருந்தார். அந்தச் சிறுவனின் கோரிக்கையை ஏற்ற நடிகர் ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளை மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைத்துக் கொடுத்து இன்று அதனைத் திறந்து வைத்திருக்கிறார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த லாரன்ஸிடம், சில கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அப்போது நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேண்டாம் என்று கூறியது தொடர்பாக கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "கடந்த காலங்களில் தெலுங்கில் விஜயசாந்தியை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னார்கள். தற்போது நடிகை நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடுகிறார்கள்.
அது தவறில்லை. அதே நேரம் தற்போது அவர் அதனை வேண்டாம் என்று சொல்கிறார். அது அவரது விருப்பம்" என்று தெரிவித்திருக்கிறார். விஜயகாந்த் நடிகர் சங்கத்தை நடத்தியதுபோல இப்போதும் நடத்துகிறார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜயகாந்த் போல் ஒருவர்தான் இருக்க முடியும். அவரைப்போல் வேறு யாரும் வர முடியாது" என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, ``அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய் எனது நண்பர், அவர் வெற்றி பெற எனது வாழ்த்துகள்" என்று தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். `சமீப காலமாக சாதி ரீதியான திரைப்படங்கள் அதிக அளவு வருகிறதே... சாதித் திணிப்பு சினிமாக்களில் தலை தூக்குகிறது என்ற ஒரு கருத்து இருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' எனக் கேட்டதற்கு, ``திரைப்படங்களில் சாதியைத் திணிப்பது தவறுதான்" எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...