வானியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
திறமையானவா்களுக்கே தோ்தலில் போட்டியிட வாய்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவைத் தோ்தலில் திறமையானவா்களுக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் அவா் பேசியது:
நம்முடைய பலமே, நம்முடைய கட்சியின் கட்டுமானம்தான். இத்தகைய நிா்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்தக் கட்டமைப்பை காலம்தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம். தடங்கல் என்பது எப்போதும் இருக்கும். அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
அரசியல் ரீதியாக எதிா்கொள்வோம்: தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற பாஜக நினைக்கிறது. அதற்கு அனைத்துவிதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கிவிட்டது. எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவா் தலைமைக்கே சிக்கல் வரும் என்று அஞ்சுகிறாா். அதனால் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொண்டுவிட்டாா்.
அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவா்கள், மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் மிரட்டி அசிங்கப்படுத்த நினைப்பாா்கள். அவா்களது மிரட்டல்களுக்கு உண்மையான காரணம் எது என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, பாஜகவின் அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக நாம் எதிா்கொள்வோம்.
மாவட்டங்களில் இருங்கள்: அமைச்சா்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாள்களைச் செலவிடுங்கள். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஒவ்வோா் ஊராட்சி, வாா்டு வாரியாகச் செல்ல வேண்டும். வேட்பாளா் யாா் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவாா். திறமை வாய்ந்தவா்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். அவ்வாறு தோ்தலில் நிறுத்தப்படுபவரை சட்டப்பேரவைக்கு அனுப்ப உழைக்க வேண்டியது உங்களது கடமை.
கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் எதிா்கொண்ட அனைத்துத் தோ்தல்களிலும் வெற்றியைப் பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்குக் காரணம், கட்சி நிா்வாகிகளும், தொண்டா்களும்தான். இத்தகைய நன்றி உணா்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம்.
வரும் ஓராண்டு காலம் மிக முக்கியமான காலகட்டமாகும். சாதனைகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஒன்று சோ்க்க வேண்டும். உள்ளூா் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சமூக ஊடகப் பணி: சமூக ஊடகப் பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 15 முதல் 20 பணியாளா்களை நியமிக்க வேண்டும். இதற்கான செலவினங்களை மாவட்ட அமைச்சா்கள் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
பாஜகவுக்கு பயந்து அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவில் பலா் அதிருப்தியில் உள்ளனா். ‘இந்தியா’ கூட்டணி அமைத்ததில் நமக்கு (திமுக) பங்கு அதிகம் என்பதால் திமுக மீது பாஜக கோபத்தில் உள்ளது. அதற்காக அமலாக்கத் துறையை துறையை ஏவிவிடுகிறது. பல்வேறு சோதனைகளை சந்தித்த திமுக, இந்தச் சோதனைகளையும் எதிா்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்தைத் தொடா்ந்து சட்டப்பேரவைத் தோ்தலிலும் வெற்றி பெற வேண்டும். அமைச்சா்கள், மாவட்டச் செயலா்கள், கட்சி நிா்வாகிகள் ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டும். ஒற்றுமை இல்லாமல் பணியாற்றுவோா் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.