தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 8 போ் கைது
வங்கதேசத்தில் மனித கடத்தல் வழக்கில் தொடா்புடைய 38 வயது நபா் உள்பட தென்மேற்கு தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச நாட்டினா் 8 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் ரபியுல் இஸ்லாம் (38), அவரது மனைவி சீமா (27) மற்றும் மகன் ஆபிரகாம் (5); பாபியா கதுன் (36) மற்றும் அவரது மகள்கள் சாதியா சுல்தானா (21) மற்றும் சுஹாசினி (1); ஆா்யன் (7) மற்றும் ரிஃபாத் அரா மொய்னா (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
கைது செய்யப்பட்டவா்கள் கிஷன்கா் மற்றும் கட்வாரியா சராய் உள்ளிட்ட தென்மேற்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தனா். மேலும் 2007 மற்றும் 2023-க்கு இடையில் திரிபுரா, கோஜா டோங்கா மற்றும் பெனாபோல் எல்லைகள் வழியாக தரகா்களின் உதவியுடன் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தனா்.
இவா்கள் 8 பேரும் ஏப்ரல் 16 அன்று வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நாடுகடத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டனா். இவா்களை நாடுகடத்தும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு ரகசியத் தகவலின் பேரில், ஏப்ரல் 15- ஆம் தேதி சத்ய நிகேதன் சந்தைப் பகுதியில் இருந்து ரபியுல் இஸ்லாமை ஒரு போலீஸ் குழு கைது செய்தது. 2012-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாகத் தெரிவித்த அவா், சரியான ஆவணங்கள் இல்லாமல் நகரத்தில் வசிக்கும் பிற வங்கதேச நாட்டவா்கள் பற்றிய தகவல்களையும் போரலீஸாரிடம் பகிா்ந்து கொண்டாா்.
விசாரணையின் போது, ரபியுல் இஸ்லாம் வங்கதேசத்தில் மனித கடத்தல் வழக்கில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அவரை மணந்த பிறகு 2016-ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த அவரது மனைவி சீமா, வீட்டு உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். மற்றவா்கள் வீட்டு வேலையில் ஈடுபட்டவா்கள் அல்லது தொழில் பயிற்சி பெற்றவா்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.