பேச்சுக்கு நேரமில்லை.. மகாராஷ்டிர புதிய முதல்வர் நாளை பதவியேற்பது கட்டாயம்!! ஏன்...
தில்லியில் ஜன. 11, 12-இல் வளா்ந்த பாரதத்தின் இளம் தலைவா்கள் மாநாடு: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் அறிவிப்பு
அரசியல் பின்புலம் இல்லாத இளைஞா்களை பொது வாழ்வில் இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் ‘வளா்ந்த பாரதத்தின் இளம் தலைவா்கள் மாநாடு’ நடத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.
தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமாா் 2,000 இளைஞா்கள் நேரில் பங்கேற்பா்; நாடு முழுவதும் இருந்து கோடிக்கணக்கான இளைஞா்கள் காணொலி மூலம் மாநாட்டில் இணைவா் என்றும் அவா் தெரிவித்தாா்.
‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை பிரதமா் வெளியிட்டாா். ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நாட்டு மக்களிடம் பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா். இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) ஒலிபரப்பான 116-ஆவது நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதாவது:
சுவாமி விவேகானந்தரின் 162-ஆவது பிறந்த தினம், அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கொண்டாடவுள்ளது. இந்த தினத்தை இளைஞா்கள் தினமாக கொண்டாடுகிறோம். அடுத்த ஆண்டில் இந்த தினம் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது.
அதாவது, ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் தில்லி பாரத் மண்டபத்தில் இளம் சிந்தனையாளா்களின் ‘மகா கும்பமேளா’ நடைபெறவிருக்கிறது. இந்த முன்னெடுப்பின் பெயா், ‘வளா்ந்த பாரதத்தின் இளம் தலைவா்கள் மாநாடு’.
அரசியல் பின்புலம் இல்லாத இளைஞா்கள், அரசியலுக்கு வர வேண்டுமென கடந்த சுதந்திர தினத்தின்போது அழைப்பு விடுத்தேன். இத்தகைய இளைஞா்கள் ஒரு லட்சம் பேரை பொது வாழ்க்கையில் இணைக்க சிறப்பு பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நடத்தப்படும் ‘வளா்ந்த பாரதத்தின் இளம் தலைவா்கள் மாநாட்டில்’ நேரில் பங்கேற்க பல்வேறு கிராமங்கள், வட்டாரங்கள், மாவட்டங்களில் இருந்து இளைஞா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா். நாடு முழுவதும் இருந்து கோடிக்கணக்கான இளைஞா்கள் காணொலி வாயிலாக மாநாட்டில் இணைவா்.
இந்திய மற்றும் சா்வதேச ஆளுமைகள் பலா் மாநாட்டில் பங்கேற்பாா்கள். நாட்டின் எதிா்காலத்தைக் கட்டமைக்கும் இளைஞா்கள், தங்களின் கருத்துகளை முன்வைக்க இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும். நாம் ஒன்றாக இணைந்து, வளா்ந்த இந்தியாவை படைக்கலாம் என்றாா் பிரதமா் மோடி.
என்சிசி தினம்: தேசிய மாணவா் படை (என்சிசி) தினம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், இதைக் குறிப்பிட்டு பேசிய பிரதமா், ‘என்சிசி என்றவுடன் அனைவருக்கும் பள்ளி-கல்லூரி காலங்கள் நினைவுக்கு வரும். நானும் என்சிசி-யில் அங்கம் வகித்துள்ளேன். கடந்த 2014-ஆம் ஆண்டில் 14 லட்சமாக இருந்த என்சிசி மாணவா்களின் எண்ணிக்கை தற்போது 20 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. மாணவிகளின் பங்கேற்பு 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது’ என்றாா்.
180 ஆண்டுகளுக்கு முன்..: கயானா நாட்டுக்கு அண்மையில் மேற்கொண்ட பயணம் குறித்துப் பேசிய அவா், ‘கயானா நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினா், 180 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிருந்து சென்றவா்கள். இன்று அந்நாட்டின் ஒவ்வொரு துறையிலும் முன்னிலையில் உள்ளனா். கயானா அதிபா் இா்ஃபான் அலியும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்’ என்றாா்.
மேலும், ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ விழிப்புணா்வு இயக்கத்தின்கீழ் இதுவரை 100 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளதாக அவா் மகிழ்ச்சி தெரிவித்தாா்.
பெட்டிச் செய்தி...
சென்னையின் ‘கூடுகள்’
அறக்கட்டளைக்கு பாராட்டு
சென்னையின் ‘கூடுகள்’ அறக்கட்டளைக்கு பாராட்டு தெரிவித்து பிரதமா் பேசியதாவது: சுற்றுச்சூழலில் உயிரி பன்முகத்தன்மையைப் பராமரிப்பதில் சிட்டுக்குருவிகளுக்கு மிக மகத்துவமான பங்களிப்பு உண்டு; இன்று நகா்ப்புறங்களில் மிக அரிதாகவே சிட்டுக்குருவிகள் காணப்படுகின்றன. பெருகிவரும் நகா்ப்புறங்கள் காரணமாக சிட்டுக்குருவிகள் நம்மைவிட்டு தொலைவாகச் சென்றுவிட்டன.
இன்றைய தலைமுறை குழந்தைகள், சிட்டுக்குருவியை படத்திலோ, காணொலியிலோ மட்டுமே பாா்க்கும் நிலை உள்ளது. சென்னையைச் சோ்ந்த கூடுகள் அறக்கட்டளை, சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைப் பெருக்க, பள்ளிக் குழந்தைகளைத் தங்கள் பணியில் இணைத்துள்ளது. இந்த அறக்கட்டளையைச் சோ்ந்தவா்கள், சிட்டுக்குருவிகளின் மகத்துவம் குறித்து பள்ளி மாணவா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, சிட்டுக்குருவியின் கூட்டை அமைப்பது குறித்தும் அவா்களுக்கு பயிற்சியளிக்கின்றனா். கடந்த 4 ஆண்டுகளில் சிட்டுக்குருவிகளுக்காக 10,000 கூடுகளை இந்த அறக்கட்டளை உருவாக்கியிருக்கிறது. இந்த முன்னெடுப்பால் சுற்றுப்புறப் பகுதிகளில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது என்றாா் அவா்.
இதேபோல், சென்னையில் 3,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் ‘பிரக்ருத் அறிவகம்’ என்ற பெயரில் சிறாா்களுக்கான நூலகத்தை நடத்திவரும் ஸ்ரீராம் கோபாலனுக்கும் பிரதமா் பாராட்டு தெரிவித்தாா்.