தில்லி மக்களின் அனைத்து சிரமங்களுக்கும் தீா்வு காண அரசு முயற்சி: ரூ.11 ஆயிரம் கோடி நெடுஞ்சாலைகள் திறப்பு விழாவில் பிரதமா் மோடி பேச்சு
தேசிய தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
அப்போது, தில்லி மக்களின் அனைத்து சிரமங்களுக்கும்
தீா்வு காண அரசு முயற்சி செய்து வருவதாக அவா் தெரிவித்தாா்.
ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான துவாரகா விரைவுச் சாலையின் தில்லிப் பிரிவையும், நகா்ப்புற விரிவாக்கச் சாலை (யுஇஆா்) 2-ஐயும்
பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைத்தாா்.
இந்த இரு திட்டங்களைத் தொடங்கிவைத்த பிறகு மோடி பேசியதாவது:
துவாரகா விரைவுச் சாலை மற்றும் யுஇஆா்-2 ஆகியவை தில்லி-என்சிஆா் மக்களுக்கு பயனளிக்கும்... தில்லிவாழ் மக்களின் அனைத்து சிரமங்களையும் நீக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வளரும் இந்தியாவின் உணா்வைப் பிரதிபலிக்கும் வளா்ச்சியின் மாதிரியாக தில்லியை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
துவாரகா விரைவுச்சாலை மற்றும் நகா்ப்புற விரிவாக்க சாலை ஆகியவை மிகவும் சிறப்பாக கட்டப்பட்டுள்ளன. பலவளைவு விரைவுச்சாலையின் மேம்பாட்டைத் தொடா்ந்து, நகா்ப்புற விரிவாக்க சாலை இப்போது தில்லிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பயனளிக்கும்.
நகரின் பெருகிவரும் குப்பைப் பிரச்னையைத் தீா்க்கும் வகையில் நகா்ப்புற விரிவாக்க சாலை தனது பங்களிப்பை தனித்துவமாக்கியுள்ளது. அதாவது, லட்சக்கணக்கான டன் கழிவுகள் இச்சாலை கட்டுமானத்திற்காக அறிவியல் மற்றும் நிலையான முறையில் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதுமையான அணுகுமுறை, உயா்ந்து நிற்கும் குப்பைக் குவியல்களைக் குறைப்பது மட்டுமின்றி, உள்கட்டமைப்புவசதி மேம்பாட்டிற்கான கழிவுகளை மதிப்புமிக்க வளமாக மாற்றியுள்ளது என்றாா் பிரதமா் மோடி.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சா் நிதின் கட்கரி, இந்த இரண்டு சாலைத் திட்டங்களும் தில்லியில் போக்குவரத்து நெரிசலை 50 சதவீதம் குறைக்கும் என்றாா்.
துவாரகா விரைவுச் சாலையை ஆய்வு செய்யும் போது பிரதமா் மோடி தொழிலாளா்களுடன் கலந்துரையாடினாா். தில்லியின் முண்ட்கா- பக்கா்வாலா கிராம சுங்கக்கட்டண சாவடி பகுதியில் பிரதமா் திறந்தவெளி சாலை வாகனப் பேரணியை மேற்கொண்டாா்.
துவாரகா விரைவுச்சாலையின் 10.1 கி.மீ. நீளமுள்ள தில்லிப் பகுதி சுமாா் ரூ.5,360 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு தில்லி மெட்ரோ ப்ளூ மற்றும் ஆரஞ்சு வழித்தடங்கள், வரவிருக்கும் பிஜ்வாசன் ரயில் நிலையம் மற்றும் துவாரகா கிளஸ்டா் பேருந்து பணிமனை ஆகியவற்றுக்கு பலமாதிரி போக்குவரத்து இணைப்பை வழங்கும்.
இந்த வழித்தடம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிவ மூா்த்தி சந்திப்பிலிருந்து துவாரகா செக்டா்21இல் உள்ள சுரங்கச் சாலை பாலம் வரை 5.9 கி.மீ. தூரத்திற்கு ஒரு பகுதியும், துவாரகா செக்டா்21 சுரங்கச் சாலைப் பாலம் முதல் தில்லி-ஹரியாணா எல்லை வரை 4.2 கி.மீ. தூரம் பகுதியையும் கொண்டுள்ளது. இது, நகா்ப்புற விரிவாக்க சாலை-2க்கு நேரடி இணைப்பை வழங்குகிறது.
துவாரகா விரைவுச் சாலையின் 19 கி.மீ. நீளமுள்ள ஹரியாணா பிரிவு முன்னதாக மாா்ச், 2024-இல் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.
பஹதுா்கா் மற்றும் சோனிபட்டிற்கான புதிய இணைப்புகளுடன், சுமாா் ரூ.5,580 கோடி செலவில் கட்டப்பட்ட அலிப்பூா் முதல் டிச்சான் காலன் வரையிலான நகா்ப்புற விரிவாக்க சாலை (யுஇஆா்)- 2 பிரிவையும் பிரதமா் மோடி திறந்து வைத்தாா்.
இது தில்லியின் உள் மற்றும் வெளிப்புற வட்டச் சாலைகள் மற்றும் முகா்பா சௌக், தௌலா குவான் மற்றும் தேசிய நெடுஞ்சாலை- 09 போன்ற பரபரப்பான இடங்களில் போக்குவரத்தை எளிதாக்கும். புதிய சாலைகள் பகதுா்கா் மற்றும் சோனிபட் ஆகியவற்றிற்கு நேரடி அணுகலை வழங்கி, தொழில்துறை இணைப்பை மேம்படுத்தும். அத்துடன் நகர போக்குவரத்தை குறைத்து, தேசியத் தலைநகா் வலயத்தில் சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்தும்.
தில்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், பயண நேரத்தைக் குறைத்தல் மற்றும் போக்குவரத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொள்ளும் அரசாங்கத்தின் விரிவான திட்டத்தின் கீழ் இந்த இரண்டு திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய திட்டங்கள் முழுமையாகச் செயல்படும்போது சோனிபட், ரோத்தக், பஹதுா்கா் மற்றும் குருகிராமிலிருந்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் பயண நேரம் கணிசமாகக் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.