தில்லி மெட்ரோ ரயில்களில் மாணவா்களுக்கு தள்ளுபடி கோரி பிரதமருக்கு கேஜரிவால் கடிதம்
தில்லி மெட்ரோ கட்டணத்தில் மாணவா்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பிரதமா் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா். பாஜக தனது தோ்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கேஜரிவால் இந்த வேண்டுகோளை வெள்ளிக்கிழமை விடுத்துள்ளாா்.
பின்னா், ஒரு செய்தியாளா் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த கேஜரிவால் கூறியதாவது: பிப்.5-ஆம் தேதி நடைபெறும் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால் ஆண் மாணவா்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்படும். தில்லியில் பெண்கள் ஏற்கெனவே இலவசப் பேருந்து பயணங்களை அனுபவித்து வருகின்றனா். இப்போது, ஆண் மாணவா்களுக்கு அவா்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும், கல்வி அணுகலை மேம்படுத்தவும் அதே சலுகையை வழங்குவோம்.
எவ்வாறாயினும், தில்லியில் தற்போது நடைமுறையில் உள்ள மாதிரி நடத்தை விதிகள் (எம்சிசி) காரணமாக இந்த அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த முடியாது. தில்லி தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால் இந்தத் திட்டம் எனது அரசுக்கு முன்னுரிமையாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். பிரதமா் மோடிக்கு எழுதிய கடிதத்தில், டிஎம்ஆா்சி ரயில்களில் மாணவா்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடியை மத்திய அரசும் தில்லி அரசும் தில்லி மெட்ரோவில் பங்குதாரா்களாக இருப்பதால் சமமாக ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
மெட்ரோ கட்டணங்கள் மாணவா்களுக்கு விலை அதிகம். இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு பிரதமா் மோடியிடம் நான் கேட்டுக் கொண்டுள்ளேன். பாதிச் செலவை நாங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறோம். தோ்தலுக்குப் பிறகு இந்த முயற்சியை அறிமுகப்படுத்தலாம் என நினைக்கிறோம் என்றாா் கேஜரிவால்.