தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர்: விஜய்
தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொய்யான வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி வரும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர். தங்களுக்கென்றே உண்மையான தோழமை மற்றும் பாரபட்சமற்றத் தன்மையுடன் கூடிய ஓர் அரசு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மக்களின் மனமறிந்து அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம், மக்களுக்காக 'மனசாட்சி உள்ள மக்களாட்சி'யை அமைக்கும் உன்னத லட்சிய நோக்குடன் களமாடி வருகிறது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நா வரேன்” என்கிற நமது பயணம்தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம்.
நாளை (13.09.2025) காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து, நமது மதுரை மாநாட்டில் சொன்னதுபோலவே, என் குடும்ப உறவுகளாகிய உங்களைச் சந்திக்க, உங்களுக்காகவே குரல் கொடுக்க உங்கள் விஜய், நம் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில், "மக்களிடம் செல்" என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன்.
ஓர் அரசியல் கட்சியின் தலைவராக, நாம் ஜனநாயக முறையில் மக்களைச் சந்திக்க விழைகிறோம். இந்நிலையில், தமிழ்நாட்டு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில், எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை நம் கட்சியின மீது மட்டும் காவல்துறை விதித்துள்ளது. இப்படி பாதுகாப்பு சார்ந்த தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து தார்மீகக் கடமையோடு நமது கட்சித் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை இந்த அரசும் காவல்துறையை வழிநடத்தும் தமிழ்நாட்டு முதலமைச்சரும் உறுதி செய்ய வேண்டும்.
ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு
கட்சித் தோழர்களாகிய நீங்களும் நமது பொது மக்கள் சந்திப்பிற்கு ஏதுவாக, அந்தந்த மாவட்டங்களில் பங்கு பெற்றும் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டும், ஏற்கெனவே பொதுமக்களுக்கு இடையூறின்றி மக்கள் சந்திப்புகளை நடத்த நாம் தேர்ந்தெடுத்துள்ள நாட்களில் அவர்களைச் சந்திக்க ஏதுவாகப் பாதுகாவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறைக்கு உறுதுணையாகக் காவல்துறை அளித்துள்ள வழிமுறைகளைக் கடமை, கண்ணியம் மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் பின்பற்றி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், இயற்கையின் துணையால் உங்கள் அனைவரின் பேரன்பால் நம்முடைய இந்த மக்கள் சந்திப்புப் பயணம் மகத்தான வெற்றி பெறும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் “உங்க விஜய், நான் வரேன்”. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.