கல்யாண சுப்பிரமணியர்!
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள மத்யார்ஜுனம் எனப்படும் இடைமருதூர் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் அதற்கு நேர் எதிரிலேயே காவிரி வடகரையில் அமைந்துள்ள ஆதிமத்யார்ஜுனம் இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
சிவன் - பார்வதியை திருமணக்கோலத்தில் காண அவா கொண்டு இத்தலத்தில் காசியப முனிவர் தவம் இயற்றினார். சிவபெருமான் அவருக்குக் கருணை புரிய திருவுளம் கொண்டார். "எப்பொழுது காவிரியின் கரைகளில் சுயம்பு லிங்கங்கள் முளைத்து வெளிப்படுகின்றனவோ, அத்தருணத்தில் உமது கோரிக்கையின்படி யாம் திருமணக்கோலத்தில் காட்சி தருவோம்' என்று அசரீரியாக அருளினார்.
சிலகாலம் கழிந்த நிலையில், தைப்பூச நன்னாளில் காவிரியின் இருமருங்கிலும் லிங்கங்கள் முளைக்கத் தொடங்கின. ரிஷப வாகனராய்க் கல்யாணக் கோலத்தில் அம்மையப்பரைத் தரிதித்து மகிழ்ந்தார் காசியப முனிவர். அது மட்டுமா? அங்கு சுயம்புவாக முளைத்த மகாலிங்க சுவாமிக்கு தென்கரையை அளித்துவிட்டு, தாம் வடகரைலேயே நிலைத்து விட்டார் லிங்கபிரான். அதனாலேயே இவருக்கு ஆதிமத்யார்ஜுனேஸ்வரர் என்றும், இடம் கொடுத்த ஈஸ்வரர் என்றும் பெயர்கள் நிலைத்தன. அம்மையின் திருநாமம் இங்கேயும் ஸ்ரீ பிருஹத்சுந்தரகுஜாம்பிகை தான்.
அம்மையப்பர் கல்யாணக்கோலத்தில் காட்சிதந்தருளியதால் கல்யாணபுரம் என்ற பெயராலேயே இத்தலம் வழங்கப்படுகின்றது. இத்தலத்து வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் மிகுந்த வரப்பிரசாதி. தொன்மையான திருமேனியர். சஷ்டி, கிருத்திகை தினங்களில் இவரை வழிபட்டு திருமணப்பிராப்தி அடைபவர்கள் ஏராளம்.
அதேபோல் கோஷ்டத்தில் ஜ்வாலா துர்கை சந்நிதியும் காண்பதற்கு அரியது. அஷ்டமி தினங்களில் சண்டி ஹோமம் நிகழ்த்தி வழிபடுவோருக்கு தோஷங்கள் நிவர்த்தி ஆகும். பட்டினத்தாரும், பத்ரகிரியாரும் இத்தலத்து ஈசனை வழிபட்டுள்ளனர். காச்யப முனிவருக்கும் தலவிருட்மாகிய மாமரத்தின் கீழே தனித்த சிறிய சந்நிதி உள்ளது.
பிரும்மஹத்தி தோஷ நிவர்த்திக்காக திருவிடைமருதூர் செல்கிறவர்கள் அருகிலேயே உள்ள இந்த ஆதிமத்யார்ஜுனேஸ்வரரை வணங்கிடக் கூடுதல் பலன் கிடைப்பது நிச்சயம்.
இத்தலத்தில் திருமணம் வேண்டி வழிபாடு செய்கிறவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கிறது. காஸ்யப கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம்.
கும்பகோணத்திலிருந்து (பூம்புகார் சாலையில்) 9 கி.மீ. தொலைவில் திருவிசநல்லூர் அருகே கல்யாணபுரம் அமைந்துள்ளது
-சுஜாதா மாலி