மகப்பேறு அருளும் மத்யபுரீஸ்வரர்!
கொங்கு நாட்டின் நான்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்று, காஞ்சிக் கூவல்நாடு. இதை காஞ்சிக் கோயில் நாடு என்றும் குறிப்பிடுவர். காஞ்சிக் கூவல் நாட்டின் தலைநகர் கூவலூரே மருவி தற்போது கூகலூர் என்று அழைக்கப்படுகிறது. அன்றைய பாரியூரும், இன்றைய கோபிசெட்டிபாளையமும் காஞ்சிக் கூவல் நாட்டுப் பகுதியைச் சேர்ந்த ஊர்களே.
சுற்றிலும் பல ஊர்களைக் கொண்டு கூவலூர் நடுநாயகமாக அமைந்திருந்ததால் இதற்கு நடுவூர், நட்டூர் எனவும் பெயர்கள் அமைந்தன. இந்த அடிப்படையில் தான் இத்தலத்தில் கோயில் கொண்ட சிவபெருமானின் திருநாமம் நட்டூராண்ட நாயகர், நடுவூர் நாயகர், நடுவூறல் நாயகர் என அமைந்தன. தற்போது இறைவன் மத்யபுரீசுவரர் என அழைக்கப்படுகிறார். மேற்கு நோக்கிய சிவாலயங்கள் விசேஷமானவை. அவை பெரும்பாலும் பரிகாரத் தலங்களாக அமைகின்றன. அந்த வகையில் இவ்வாலயம் மணப்பேறு, மகப்பேறு அருள்வதில் பிரசித்தமாகத் திகழ்கிறது.
முதலாம் மாறவர்மன் சுந்தர சோழ பாண்டியன் இரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், சந்தியா தீபம் வைக்க இறையிலியாகக் கொடுத்ததைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் கோயிலில் கண்டறியப்பட்டுள்ளன. சிவபெருமான் நட்டுராண்ட நாயகர், சொக்காண்டார் என இரு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ள செய்தியையும் இதன் மூலம் அறியலாம். எனவே, அதற்கும் முன்பே இந்தக் கோயில் அமைந்திருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.
இராஜகோபுரம் எதுவும் இல்லை. நெடிய மதில் சுவர் உள் சுற்றுக்கு அரணாக அமைந்துள்ளது. நுழைவு வாயிலில் அரசமரத்தடி விநாயகர், மகா மண்டபத்தின் முன்னே கொடிமரம், பலி
பீடம், நந்தியம்பெருமானும், அதனைக் கடந்து செல்லும் போது, வள்ளி} தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமியையும் தரிசிக்கலாம்.
கருவறையில் வட்டவடிவமான ஆவுடையார் மீது, மேற்குப் பார்த்த நிலையில் சிவலிங்கத் திருமேனியராக மத்யபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சுவாமி கருவறைக்கு வலது புறம் பச்சைநாயகி தனிச்சந்நிதி கொண்டுள்ளார். கொங்கு நாட்டில் ஒரு சில அம்பாள் மட்டுமே சுவாமிக்கு வலப்புறம் அருள்பாலிப்பது குறிப்பிடத்
தக்கது. மரகதவல்லி என்றும் அம்பாள் அழைக்கப்படுகிறாள். பரிவாரத் தேவதைகளோடு அறுபத்து மூவர் மற்றும் நால்வர் சந்நிதிகள் உள்ளன.
மத்யபுரீசுவரர் திருக்கோயிலுக்கு அருகாமையில் அலர்மேலு மங்கைத்தாயார் உடனுறை கல்யாண வெங்கட்ரமணப் பெருமாள் கோயிலும், செல்லியாண்டி என்ற அம்மன் கோயிலும் உள்ளன. மாதாந்திர சிவராத்திரி, பிரதோஷம், அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், கந்தசஷ்டி போன்ற வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 8.கி.மீ. பயணித்து கூகலூரை அடையலாம்.
பொ.ஜெயச்சந்திரன்