திருமணம் கைகூடும் திருநல்லம்
ஆணோ, பெண்ணோ ஒவ்வொருவர் வாழ்விலும் திருமணம் என்பது இனிமையான, இன்றியமையாத நிகழ்வாகும். திருமணம் கைகூடும் திருநல்லம் எனப் புராணங்கள் புகழும் நாகை மாவட்டம், கோனேரிராஜ
புரத்தில் உள்ளது அருள்மிகு உமாமகேஸ்வரர் கோயில். கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவியால் கற்றளியால் கட்டப்பட்ட இக்கோயிலை பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே தரிசிக்க முடியும் என்பது அப்பரின் வாக்கு.
திருமணக் கோலத்தில் இருக்கும் ஸ்ரீகல்யாண
சுந்தரேஸ்வரருக்கு அன்னை பராசக்தியை மகாவிஷ்ணு தாரை வார்த்துக்கொடுக்கும் காட்சி இத்தலத்தின் சிறப்பு. ஜாதகத்தில் களத்திர தோஷமிருந்து திருமணம் நின்று
போனவர்களும், தள்ளிப்போனவர்களும் இங்குள்ள இறைவனையும் இறைவியையும் தரிசித்தால் விரைவில் திருமணப்பேறு அமையும் என்பது நம்பிக்கை. மேலும் இவர்களை வழிபட்டால் உடல்நலம் பெறும் . எமபயம் நீங்கும்.
காவிரித் தென்கரையில் 34 ஆவது சிவத்தலம். புரூரவஸ் என்னும் மன்னன் இத்தலத்தில் உமா மகேஸ்வரரை வழிபட்டு தோல் நோய் நீங்கப் பெற்றான். மனம் மகிழ்ந்த மன்னன் தனது காணிக்கையாக மூலவரின் விமானத்தை தங்கத் தகடால் அலங்கரித்தான். இங்குள்ள நடராஜப் பெருமான் மிகப் பெரிய பஞ்சலோகத் திருமேனி.
நளமகராஜன் தமயந்தியுடன் திருநள்ளாறு செல்லும் முன் இவ்வாலயம் வந்து வழிபட்டுச் சென்றுள்ளான். இங்கு சனிபகவான் கறுப்பு நிற ஆடைக்குப் பதிலாக வெள்ளை நிற ஆடை அணிந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் தீபம் போட்டால் எல்லா தோஷங்களும் விலகும். ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகமும் மார்கழித் திருவாதிரையும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தேவர்கள், முனிவர்கள், அகத்தியர், அக்னிபகவான், நவகிரகங்கள் வழிபட்ட திருத்தலம் இது.
உ.இராசமாணிக்கம்